- கவர்னர்
- 16வது
- சட்டசபை
- தமிழகம்
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்
- தமிழ்நாடு சட்டமன்றம்
- விஜயி
சென்னை: தமிழ்நாட்டின் 16வது சட்டசபை கலைக்கப்படுவதாக தமிழக ஆளுநர் (பொறுப்பு) ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தமிழக சட்டப் பேரவை தேர்தல் நடந்து முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. புதிய வரவான விஜய்யின் தவெக 108 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. ஆனால் பெரும்பான்மைக்கு 118 தொகுதிகள் தேவைப்படுகிறது. இதற்காக த.வெ.க. சார்பில் பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி அமைக்க முழு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. 5 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை விஜய்யிடம் வழங்கினர்.
இதனை தொடர்ந்து, கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்று தமிழக பொறுப்பு கவர்னர் அர்லேகரை சந்தித்த த.வெ.க. தலைவர் விஜய், தமிழகத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரினார். இந்நிலையில் தமிழ்நாட்டின் 16-வது சட்டப்பேரவை மே 5ம் தேதியுடன் கலைக்கப்பட்டதாக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு லோக்பவன் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், ”மே 5 ம் தேதியில் இருந்தே தமிழ்நாட்டின் 16வது சட்டசபை கலைக்கப்பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் விஜய் முதல்வராகி அவரது தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கான நடைமுறை தீவிரமாகி உள்ளது.
