சென்னை: தமிழகத்தில் தற்போது யாருக்கும் பெரும்பான்மையின்றி தொங்கு சட்டமன்றம் அமைந்துள்ள நிலையில் தவெக-உடன், காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைக்க கூடும் என்ற தகவல்கள் பரவி வரும் நிலையில், திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான டி.கே.எஸ். இளங்கோவன் காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடி பேசி இருக்கிறார்.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியின் போது பின்வருமாறு பேசியுள்ளார். காங்கிரஸுக்குள் ஆரம்பத்திலிருந்தே சிலர் TVK-வுடன் கூட்டணி அமைத்து கொள்ள விருப்பம் தெரிவித்தனர், இந்த விவகாரம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் தற்போது கூட்டணியில் நின்று வெற்றி பெற்ற பின் வேறு கட்சிக்கு ஆதரவுக்கரம் நீட்ட முனைகிறது.
‘பழம்பெரும் கட்சியான’ காங்கிரஸ் இதே அணுகுமுறையை மற்ற சில மாநிலங்களிலும் கடைப்பிடித்தது, அதன் விளைவாக டெல்லி மற்றும் மேற்கு வங்கம் ஆகிய இரு இடங்களிலிருந்தும் முற்றிலுமாக காங்கிரஸ் கட்சி துடைத்தெறியப்பட்டது. காங்கிரஸின் இத்தகைய உத்திகள் “அக்கட்சியையே மொத்தமாக மூடிவிடும்” என்று திமுக தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன் குறிப்பிட்டார். மகாராஷ்டிராவில் அவர்களுக்கு எந்த வாய்ப்பும் இல்லை. அவர்கள் தங்கள் கட்சியையே மூடிவிடும் வகையிலான ஒரு செயலைச் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டார்.
காங்கிரஸ் கட்சி தவெக-விற்கு ஆதரவளிக்க உள்ளதாக வெளியான தகவல் குறித்து பேசிய திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை, அக்கட்சியின் முடிவை குறுகிய கண்ணோட்டம் கொண்டதுஎன்று சாடியதுடன், INDIA கூட்டணியில் உள்ள கூட்டணிக் கட்சிகளின் “முதுகில் குத்தியது” போலாகிவிடும் என்றார். ஒருவேளை வெளிப்படையாக தவெக-விற்கு காங்கிரஸ் ஆதரவை அறிவிக்கும்பட்சத்தில் அவர்கள் ஒரு நம்பகத்தன்மையற்ற கூட்டணி கட்சி என்ற பெயரை பெறுவார்கள். காங்கிரஸ் கட்சியை நம்ப முடியாது என்ற ஒரு பிம்பமும் நாடு முழுவதும் உருவாகும் என்றார்.
வரும் 2029-ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள முக்கியத் தேர்தல்கள் நெருங்கி கொண்டிருக்கின்றன; அத்தேர்தலில் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றிவிட முடியும் என்பதில் நாங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறோம். ஆனால் இப்போது காங்கிரஸ் எடுக்க போகும் இந்த முடிவு கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார்.
