×

லாரி மீது கார் மோதி விபத்து; பிரபல மலையாள நடிகர் பலி: மனைவி படுகாயம்

 

திருவனந்தபுரம்: கேரளம் மாநிலம் பத்தனம்திட்டா அருகே இன்று காலை லாரி மீது கார் மோதிய விபத்தில் பிரபல மலையாள நடிகர் சந்தோஷ் கே. நாயர் பரிதாபமாக இறந்தார். அவரது மனைவி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சந்தோஷ் கே. நாயர் (65). கடந்த 1982ம் ஆண்டு ‘இது ஞங்களுடெ கதா’ என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானார். 100க்கும் மேற்பட்ட படங்களில் வில்லன், நாயகன், நகைச்சுவை, குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

இது தவிர ஏராளமான மலையாள டிவி தொடர்களிலும் நடித்து வந்தார். இவரது நடிப்பில் கடைசியாக சமீபத்தில் வெளியான மோகினியாட்டம் என்ற படம் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தநிலையில் இன்று காலை சுமார் 6.30 மணியளவில் நடிகர் சந்தோஷ் கே. நாயர் பத்தனம்திட்டா அருகே தன்னுடைய மனைவி சுபயுடன் காரில் சென்று கொண்டு இருந்தார். அடூர் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதியது.

இதில் படுகாயமடைந்த சந்தோஷ் கே.நாயரும், அவரது மனைவியும் உடனடியாக அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சந்தோஷ் கே.நாயர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். அவரது மனைவிக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Thiruvananthapuram ,Santosh K. Nair ,Pathanamthitta ,Kerala ,
× RELATED கள்ளக்காதலனுடன் வாழ்ந்த பெண் உரலால் தாக்கி கொலை: 3 சகோதரர்கள் கைது