நன்றி குங்குமம் தோழி
நான்கு சுவர்களுக்குள் நந்தவனம்
வீடுதான் நம்மை அரவணைக்கும் இடம். நம் உணர்வுகளை ெவளிப்படுத்தவும், பிறரிடம் மனம் திறந்து பேசவும், நம்மை ஒருநிலைப்படுத்திக் கொள்ள உதவும் ஆசுவாசமான இடமும் நம் இருப்பிடம் மட்டுமே. வேலை செய்யுமிடம் மன அமைதியைத் தராமல் சங்கடங்களை ஏற்படுத்தலாம். அந்த சமயத்தில் ‘எப்படா வீட்டிற்குப் போவோம்’ என்ற ஆதங்கம் உள்மனதில் தோன்றும். அதிகமான மன உளைச்சல் ஏற்படும் போதெல்லாம் ‘முதல்ல வீட்டுக்குப் போய் ஒரு கப் காபி குடிச்சுட்டு குட்டித் தூக்கம் போட்டாத்தான் சரியாகும்’ என்று ேதான்றும். அப்படிப்பட்ட வீட்டில் நம்மை சொர்க்கம் போல் உணரச் செய்வது அதன் அழகான அமைப்புதான்.
குறிப்பாக நம் மகிழ்ச்சியான தருணங்கள், மனதை பாதித்த விஷயங்கள் என அனைத்தையும் குடும்பத்தோடு பகிர்ந்து கொள்ளும் இடம்தான் படுக்கையறை. வாழ்க்கையை ஆரம்பிப்பது முதல் முக்கிய தருணங்கள் ஒவ்வொன்றிலும் மனம் திறந்து உணர்வுகளை பங்கிட்டுக் கொள்ளும் இடம் இதுதான். அந்த அறையினை மற்ற அறையினை விட தூய்மையாகவும், ஆரோக்கியமாகவும் கவனம் செலுத்த வேண்டும். சிலர் கட்டில் சரியாக போடவில்லை என்பதால், தூக்கம் சரியாக வருவதில்லை என்பார்கள். சிலர் அடிக்கடி சண்டை வருவதாகக் கூறுவார்கள்.
அமைதியோடு கூடிய ஆழ்ந்த உறக்கத்திற்கு, நல்லதொரு சூழலை அந்த அறையில் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். முக்கியமாக மனம் லயிக்கும் படியான நிறங்களை தேர்ந்தெடுப்பது அவசியம்.அதிகப்படியான பொருட்களை கொண்டு அடைத்து வைக்கக்கூடாது. சிலர் செருப்புகள் முதல் பல்வேறு பொருட்களை கட்டில் அடியில் வைப்பார்கள். இவை கூட மன அமைதியை குலைக்கும். அறையில் படுத்தவுடனே சிலர் ‘தும்ம’ ஆரம்பிப்பார்கள். சிறிய குப்பை கூட சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டிய இடம்தான் நம் படுக்கையறை.
தினமும் எட்டு மணி நேரம் படுக்கையறையில் செலவழிப்பதால், நம் வாழ்க்கையின் மூன்றில் ஒரு பகுதி அங்குதான் செலவழிக்கிறோம். அதனால்தான் அறையின் அமைப்பு முக்கியம். இப்பொழுது பெரும்பாலான இடங்களில், படுக்கையறையோடு குளியலறையும் இணைக்கப்பட்டிருப்பதால், அதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். வீட்டில் செடிகள் வளர்ப்பதை இன்று பலரும் விரும்புகிறார்கள்.
குறிப்பாக படுக்கை அறையிலும் செடிகளை பராமரிக்கிறார்கள். ஆனால், ‘இன்டோர்’ செடிகளில் பல வகை உள்ளன. அவற்றை வரவேற்பறை, சமையல் அறையில் கூட வைக்கலாம். சில செடிகள் இரவில் ‘கார்பன்டைஆக்ஸைடு’ வெளியிடும். அந்தச் செடிகளை படுக்கை அறைக்குள் வைக்கும் போது மூச்சுத்திணறல் ஏற்படலாம். ‘மணி பிளாண்ட்’, ‘ஆலுவீரா’ போன்றவை சாதாரணமாக வளரக்கூடியவை. அப்படி படுக்கையறையில் வைக்க ஆசைப்பட்டால் நாம் உறங்கும் சமயங்களில் செடிகளை பால்கானி, வராண்டா போன்ற இடங்களில் வைத்து விட்டு உறங்கலாம்.
படுக்கையறை தூய்மையின் இருப்பிடம். பாதுகாப்பும் படுக்கையறைக்கு அவசியம் என்பதால், மிகவும் கவனத்துடன் அமைக்க வேண்டும். அறையின் அமைப்புக்கேற்றவாறு படுக்கை போடும் இடத்தை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். முன்பு மரத்தினாலான கட்டில் மட்டும் போட்டிருப்பார்கள். தலையணை, போர்வை போன்றவற்றை தனி இடங்களில் வைத்திருப்பார்கள். இன்று அறையின் இட சேமிப்பும் முக்கியமாகிறது.
பழைய கட்டில் உயரமாக இருந்து, கட்டிலின் அடியில் போதிய இடம் இருந்தால், தட்டுகள் அமைத்து, படுக்கைக்குத் தேவையான அனைத்தையும் அதில் அடுக்கலாம். கட்டில் குட்டையாக இருந்தால், கட்டிலின் மேல்பாகம் ‘பாக்ஸ்’ போல் அமைக்கலாம். இப்பொழுது விதவிதமான வேலைப்பாடுகளுடன் அழகான கட்டில்கள் ‘ரெடிமேடாக’க் கிடைக்கின்றன. நமக்குப் பிடித்த மாதிரி ஆர்டர் கொடுத்தும் செய்து கொள்ளலாம்.
வெளியில் தெரியாதவாறு உள்ளடக்கிய திறந்து மூடும் அமைப்புகள் இருக்கும். மெத்தை தவிர எதுவும் வெளிக்குத் தெரியாது. இரவு படுக்கும் போது திறந்து தலையணை, போர்வை போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். காலை எழுந்தவுடன் அனைத்தையும் உள்ளேயே மீண்டும் அடுக்கி விடலாம். சில கட்டில்களில் ‘மவுண்ட்’ போல் அலங்கரித்து, நாம் தலை வைத்து படுக்குமிடத்தில் உள்ளடக்கிய அறைகள் அமைத்திருப்பர்.
பார்க்க வெளியில் எதுவுமே தெரியாது. ஆனால், திறந்து எடுக்கும் பொழுது, நிறைய படுக்கைப் பொருட்களை உள்ளிருந்து எடுக்க முடியும். இப்படியாக பல்வேறு விதமான புதிய வசதிகள் கொண்ட கட்டில்கள் உள்ளன. கட்டில் மேலே ‘ஷோகேஸ்’ போன்று அமைத்து இரவு விளக்குகள், மருந்து, மாத்திரைகள் மற்றும் கைப்பேசி சார்ஜ் போடுமளவுக்குக் கூட வசதிகள் அமைக்கப்படுகின்றன. காலத்திற்கேற்ற கட்டில்களின் அமைப்பும் மாறுபட்டுள்ளது.
கட்டில் போடும் இடம் ஜன்னலையோ, கதவையோ ஒட்டி இருக்கக்கூடாது. நிரந்தரமாக ஒரே இடத்தில் நகர்த்த முடியாமலும் இருக்கக்கூடாது. கட்டிலை சுற்றி சுத்தம் செய்யும் அளவிற்கு இடைவெளி வேண்டும். தேவையில்லாத பொருட்களை கட்டில் அடியில் அடைத்து வைப்பதை தவிர்ப்பது நல்லது. கட்டிலின் அமைப்பும், தூய்மையான விரிப்புகளும், சுகமான தலையணைகளும் பார்க்கும் நிம்மதியான தூக்கத்தை தரும். வேலைகளை திறம்பட செய்வதற்கு நல்ல உறக்கம் தேவை. அதற்குத்தான் நல்ல படுக்கை தேவை.
கட்டிலுக்கு அடுத்து ‘சைட்டேபிள்.’ அனைத்து வசதிகளும் கொண்ட கட்டிலாக இருக்கும் பட்சத்தில் இது அவசியமில்லை. சைட்டேபிளில் ‘எமர்ஜென்ஸி’ லைட், தண்ணீர், மாத்திரை போன்றவை வைத்துக் கொள்ளலாம். இரவு விளக்கு ஒரு பக்கம் இருந்தால், மற்றவரை தொந்தரவு செய்யாமல் புத்தகம் படிக்க பயன்படுத்திக் கொள்ளலாம். அறையின் அடுத்த முக்கியமானது துணி அலமாரிகள். முன்பு பீரோக்கள் பயன்பாடு இருந்தது. இன்று அதிக கனம் கொண்ட பெரிய பொருட்களை வைக்குமளவிற்கு இடவசதி இல்லை. அதனால் எல்லோருமே ‘பில்ட்-இன்’ பொருட்களை வாங்க ஆரம்பித்து விட்டார்கள்.
தனி பீரோக்கள் இடத்தை அதிகம் ஆக்கிரமிப்பதால், ‘வார்டு ரோப்’ அலமாரிகளுக்கு மாறிவிட்டார்கள். வார்டு ரோப்களை ஒரு பெரிய சுவர் முழுவதும் அமைத்துவிட்டால் போதும். பிரோவின் தேவை இருக்காது. வார்டுரோப் மேல் பரண் அமைத்து அதை கதவு கொண்டு மூடிவிடலாம். பார்க்கும் போது சுவர் அலங்காரம் போல அமைந்துவிடும். மேலும், அதற்கு அழகிய டிசைன்கள் மற்றும் வண்ணங்கள் கொடுத்தால் பார்க்க அழகாக இருக்கும். இதில் ஒரு பகுதியினை கண்ணாடி வைத்து, உள் அறைக்குள், அலங்காரப் பொருட்களான சீப்பு, பவுடர் போன்றவற்றை வைத்துக் கொள்ளலாம். குறிப்பாக அடுக்கு மாடிக் கட்டடங்களில் வசிப்பவர்களுக்கு இடத்தை மிச்சப்படுத்தி தரும். இடம் குறுகியதாக இருந்தாலும், நாம் செய்யும் அறையின் அலங்காரங்கள் இடத்தை பெரிதாகவும் அழகாகவும் காட்ட வேண்டும்.
பெட்ரூமில் கட்டில் பெரியதாகவோ, சிறியதாகவோ விலையுயர்ந்த வேலைப்பாடுகள் எல்லாம் அவரவரின் வசதிக்கு ஏற்ப அமைத்தாலும், அதில் விரிக்கப்படும் விரிப்புகள்தான் முக்கியம். அது தூய்மையாக இருப்பது அவசியம். அவ்வப்பொழுது படுக்கை விரிப்புகள், தலையணை உறைகளை துவைத்து மாற்றி போட வேண்டும். ஜன்னலை மறைக்கும் படி அங்கு எந்த பொருட்களையும் வைக்கக்கூடாது. கனமான திரைச்சீலைகள் கொண்டு அழகுப்படுத்தலாம். ஏ.சி. அமைப்பு கொண்ட அறைகளில் திரைச்சீலைகளுக்கு பதில் ‘பிளைண்ட்ஸ்’ பயன்படுத்தலாம். அறையின் சுவர், தரை நிறங்களுக்கு ஏற்ற வண்ணத்தில் போடலாம். பசுமை நிறைந்த காட்சிகள், நீரூற்று போன்ற இயற்கைப் படங்களும், மகிழ்ச்சியான தருணங்களில் எடுக்கப்பட்ட குடும்ப புகைப்படங்களை அறையின் சுவற்றில் அழகுப்படுத்தலாம்.
மிகப்பெரிய அறையாக இருந்தால் ஒரு பக்கம் சிட்டிங் அமைப்பினை அமைக்கலாம். அங்கு அழகான சிறிய திவான் அமைத்தால், குடும்பமாக அமர்ந்து நேரம் கழிக்க நன்றாக இருக்கும். சிறிய மேசையோடு செஸ், கேரம் போன்ற விளையாட்டுகள் கூட அங்கு விளையாடலாம். இன்று குடும்பமாக அனைவரும் அமர்ந்து ஒன்றாக சாப்பிடக்கூட நேரமில்லை. அப்படியிருக்கும் பொழுது இந்த சிறிய இடம் குடும்பத்துடன் குதூகலித்து மகிழும் அழகிய தருணத்தை ஏற்படுத்தி தரும். புத்தகம் படிக்கும் பழக்கமுள்ளவர்கள், அங்கு உறக்கம் வரும் வரை படிக்கலாம். இசைப் பிரியர்கள் அங்கு சிறிய மியூஸிக் சிஸ்டம் வைத்துக் கொள்ளலாம். சிறிய தொலைக்காட்சிப் பெட்டி கூட வைக்கலாம். இந்த அறை நமக்கானது என்பதால் ஒவ்வொன்றையும் யோசித்து அழகாக அமைத்தால் பார்க்கவே அழகாகவும் மனதுக்கு நிறைவாகவும் இருக்கும்.
சில வீடுகளில் பெட்ரூமை ஒட்டி பால்கனி அமைப்பு இருக்கும். அதனை அழகான இன்டோர் தோட்டமாக மாற்றலாம். ஒற்றை ஊஞ்சல் போட வசதி இருந்தால் போட்டுக் கொண்டு, ஒருவர் அமரும் வகையில் நாற்காலியும் போட்டுக் கொள்ளலாம். இவை எதுவுமே அங்கு சாத்தியப்படாது என்று நினைத்தால், மடித்துப் போடும் ஸ்டீல் மேசை கூட பொருத்திக் கொள்ளலாம். படுக்கையறையின் நிறங்கள் மிகவும் முக்கியமானது.
அழுத்தமான நிறங்கள் மன உணர்ச்சிகளை மாற்றலாம் என்பதால், அதன் ‘ஷேட்’ நிறங்களை பயன்படுத்தலாம். உதாரணத்திற்கு சிவப்பு நிறத்தினை அப்படியே பயன்படுத்தாமல், அதில் வெள்ளை நிறத்தினை கலந்து வெளிர் நிறமாக மாற்றலாம். வெளிர் பச்சை, வெளிர் நீலம் போன்ற நிறங்களும் அழகாக இருக்கும். டெக்ஸர் என்று ஒரு பக்கம் அழுத்தமான நிறமும் மற்ற சுவர் பகுதியில் அதன் வெளிர் நிறத்தினை பயன்படுத்துகிறார்கள். இது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம்தான்.
வீட்டின் வெப்பத்தினை குறைக்க பால்ஸ் சீலிங் போடலாம். அழகோடு நல்ல குளிர்ந்த சூழலையும் தரும். மேலே ெமாட்டைமாடி இருக்கும் வீடுகளில், படுக்கையறைக்கு பால்ஸ் சீலிங் மிகவும் அவசியம். தங்க நகைக்கு பதிலாக அழகழகான கவரிங் நகைகள் மார்க்கெட்டில் இருப்பது போல் பட்ஜெட்டிற்கு ஏற்ப ஒவ்வொரு பொருளும் சந்தையில் கிடைக்கிறது. அதுபற்றி தெரிந்து கொண்டால் போதும். ஒரு காலத்தில் இன்டீரியர் டெக்ரேஷன் வசதி கொண்டவர்களுக்கு மட்டும்தான் என நினைத்தார்கள். ஆனால், இடம் சிறியதாக இருந்தாலும் நேர்த்தியாகக் காட்ட வேண்டும் என்றே நினைக்கிறார்கள்.
படுக்கை அறையுடன் இணைந்து பாத்ரூம் இருப்பதால், அதனை கவனமாக பராமரிக்க வேண்டும். கண்ணுக்குத் தெரியாத கிருமிகள், பாக்டீரியாக்கள் போன்றவை கதவைத் திறந்து மூடும்பொழுது காற்றில் பரவ வாய்ப்புண்டு. எனவே, குழாய்கள், கைப்பிடிகள் போன்றவற்றைக் கூட சுத்தமாக வைத்திருத்தல் நலம். மிதியடிகளை அவ்வப்பொழுது மாற்றிப் போட வேண்டும். கை, கால்களை சுத்தப்படுத்திக் கொண்டு, பின் படுக்கைக்குச் செல்ல வேண்டும். இயற்கையான வாசனை திரவியங்களை பயன்படுத்தலாம். படுக்கையறை அசதியை போக்கி, நல்ல உறக்கம் தரக்கூடிய இடம். அதனால் அதன் அமைப்பு புத்துணர்ச்சி தருவதாக அமைய வேண்டும்.
