பெண்களுக்கு இலவச பயிற்சி அளிக்க நான் ரெடி

நன்றி குங்குமம் தோழி

சாதிக்க வேண்டும் என்று ஒரு பெண் நினைத்துவிட்டால் கண்டிப்பாக அவளால் அந்த இலக்கை அடைந்துவிட முடியும். அதற்கு தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் இருந்தால் போதும். தன் மேல் உள்ள நம்பிக்கையால் கடந்த நான்கு வருடமாக மரச்சாமான்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார், நித்யா. இவரின் ‘ஷிவ் கிராஃப்ட்ஸ்’ மரச்சாமான் கடையில் உள்ள அனைத்து பொருட்களும் தனித்துவம் கொண்டது. ‘‘நான் பிறந்தது, படிச்சது எல்லாம் கோவையில்தான். பத்தாம் வகுப்பு வரைதான் படிச்சேன். இப்போது ஒரு தொழில்முனைவோராக இருக்கிறேன்.

முழுக்க முழுக்க மரச்சாமான்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறேன். எனக்கு வரைவதில் அதிக ஆர்வம் உண்டு. மேலும், கலை சார்ந்த பொருட்களை வீட்டில் சும்மா இருக்கும் நேரத்தில் செய்வேன். அதே போல் எனக்கு சொந்தமா ஒரு தொழில் செய்யணும்னு விருப்பமும் இருந்தது. அதை புரிந்து கொண்டு என் அம்மாவும், என் கணவரும் எனக்கு ரொம்பவே சப்போர்ட்டா இருந்து வராங்க. மரத்தில் பொருட்களை வடிவமைத்து விற்பனை செய்யலாம்னு எங்க வீட்டில் சொன்ன போது அவர்தான் என்னை முதலில் ஊக்கப்படுத்தி உன்னால் செய்ய முடியும்னு தட்டிக் கொடுத்தார்.

குறிப்பாக எனக்கு பைன் மரத்தினால் செய்யப்படும் பொருட்கள் மேல் தனிப்பட்ட ஈடுபாடு இருந்ததால், என்னுடைய மரச்சாமான்களையும் அந்த மரக்கட்டைகளில்தான் நான் தயாரித்து வருகிறேன். எல்லோராலும் தேக்கு மரத்தாலான பொருட்களை வாங்க முடியாது. ஆனால், இந்த பைன் மரத்தினால் செய்யப்படும் பொருட்களும் பார்க்க தேக்கு மரம் போலவே இருக்கும்’’ என்றவர், வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்பவும் பொருட்களை வடிவமைத்து தந்து வருகிறார்.

‘‘நான் ஆரம்பத்தில் பிறந்த நாள், திருமண நாளுக்கான பரிசுப் பொருட்களை வடிவமைத்து கொடுத்து வந்தேன். பூக்கள் அல்லது பரிசுப் பொருட்களை கூடைக்குள் வைத்து அலங்கரித்து தருவோம். அப்போது அந்தக் கூடையினை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டி இருந்தது. கூடையினை அதிக விலை கொடுத்து வாங்குவதற்கு அதை நாமே தயாரித்தால் என்ன என்று தோன்றியது. அப்படி கூடையினை தயாரிக்க ஆரம்பித்து, இன்று மரத்தால் அனைத்து மரச்சாமான்களையும் வடிவமைத்து தந்து வருகிறேன்.

முதன் முதலில் மடக்கக் கூடிய கட்டிலினை நாங்க மரத்தில் வடிவமைத்தோம். பொதுவாக வயர் கட்டிலைதான் மடக்க முடியும். ஆனால், மரத்தில் இது போன்ற மடக்கக்கூடிய கட்டிலினை தயாரித்து அதனை இன்ஸ்டாவில் போஸ்ட் செய்த போது நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து நாற்காலி, மேஜை என பலவிதமான மரச்சாமான்களை நாங்க தயாரிக்க துவங்கினோம். இதற்காக தனிப்பட்ட ஃபேக்டரி அமைத்துள்ளேன்.

என்னுடைய தனித்துவமே ஒரு பொருளை மக்கள் எளிதாக பயன்படுத்தும் அளவிற்கு கஸ்டமைஸ் செய்து தருவதுதான். வீட்டில் அமர நாற்காலி பயன்படுத்தலாம். ஆனால், அதையே வெளியே கொண்டு போக வேண்டும் என்றால் அப்படியே தூக்கிக் கொண்டு போவது சிரமமாக இருக்கும். அதை மடித்துக் கொண்டு போனால் எளிதாக இருக்கும். அதே போல் கட்டில், நம் அறையில் ஒரு பெரிய பகுதியை எடுத்துக்கொள்ளும். அப்படி இல்லாமல் இரவு படுக்கும் நேரம் மட்டுமே அதை பயன்படுத்தினால் போதும் என்று நினைப்பவர்களுக்கு சோஃபா கம் பெட்டாக அமைத்து தருகிறோம். டைனிங் டேபிளையும் பெரிய அளவில் இல்லாமல் மேஜை, நாற்காலி அனைத்தும் ஒரு ஸ்டூல் போல் ஒன்றுக்குள் ஒன்றாக அடுக்கிக் கொள்ளலாம்.

தேவைப்படும் போது நாற்காலியினை எடுத்துக் கொள்ளலாம். இது ேபான்ற பொருட்களை நாங்க வடிவமைக்க ஆரம்பித்தோம். காரணம், நாம் பயன்படுத்தும் பொருட்கள் ஒரே இடத்தில் இல்லாமல் பல இடங்களுக்கு அதை பயன்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும் என்று சிந்தித்துதான் ஒவ்வொரு பொருட்களையும் தயாரிக்க ஆரம்பித்தோம்.சில வாடிக்கையாளர்கள் நாங்க வடிவமைத்த பொருட்களை வாங்கிச் செல்வார்கள். சிலர் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப சில டிசைன்களை காண்பித்து அதன்படி செய்து தரச் சொல்வார்கள். அதற்கேற்பவும் வடிவமைத்து தருகிறோம். மேஜை நாற்காலி மட்டுமில்லாமல் ரிட்டர்ன் கிஃப்ட் பொருட்களையும் நாங்க மரத்தில் வடிவமைத்து தருகிறோம்.

அப்படித்தான் நாங்க வடிவமைத்த நகைப் பெட்டியினை ஒரு வாடிக்கையாளர் அவரின் மகளுடைய திருமணத்திற்காக ரிட்டர்ன் கிஃப்ட்டாக வேண்டும் என்று ஆர்டர் கொடுத்தார். எங்களின் பெரும்பாலான பொருட்களை இடத்தை சேமிக்கக்கூடிய அளவில் வடிவமைத்து வருகிறோம். ேமலும், பைன் மரம் மறுபடியும் ரீயுசபில் என்பதால், பாழானாலும் திரும்ப வேறு பொருளாக மாற்றி அமைக்க முடியும்’’ என்றவர், முழுக்க முழுக்க இன்ஸ்டா மூலமாகத்தான் மார்க்கெட்டிங் செய்துள்ளார்.

‘‘சமூக வலைத்தளம் மட்டுமில்லாமல் கண்காட்சி ேபான்ற இடங்களிலும் நாங்க ஸ்டால் போடுவோம். மேலும், பல பெண்களுக்கு சுயமாக ெதாழில் செய்ய வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். ஆனால், அதை எவ்வாறு செய்வதுன்னு அவங்களுக்கு தெரியாது. அப்படிப்பட்ட பெண்களுக்கு நான் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தேன். என்னுடைய பொருட்களை அவர்கள் வாங்கி சென்று லாப தொகைக்கு விற்பனை செய்யலாம்.

இதன் மூலம் என்னுடைய பொருட்களுக்கு மார்க்கெட்டிங் கிடைக்கும். அதே சமயம் அந்தப் பெண்களுக்கும் ஒரு வருமானத்தை ஏற்படுத்தி தர முடிந்தது. என்னைப் பொறுத்தவரை பெண்கள் வெளியே வரணும். அவர்களுக்காக ஒரு வருமானத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கான முழு சப்ேபார்ட் கொடுக்க நான் தயார். நான் இந்த துறையில் இருக்க காரணம் என் அம்மாதான். அவங்கதான் உன்னால முடியும்னு எனக்கு தைரியம் கொடுத்தாங்க.

இப்பவும் அவங்கதான் எனக்கு பக்கபலமா இருந்து வராங்க. நான் துவண்டு விழும் போது எல்லாம் எனக்கு ஒரு ஊன்றுகோலாக நின்று கை கொடுத்தாங்க. சில சமயம் இயந்திரக் கோளாறு ஏற்பட்டு வேலை தடைபடும். அம்மாதான் தைரியம் தந்தாங்க. எல்லாம் கடந்து முன்னேறணும்னு ஆறுதல் ெசால்வாங்க. என் கூடப் பிறந்தவங்க ஐந்து பேர். அதில் நான் ஒருத்தி மட்டும்தான் சொந்தமா தொழில் செய்து வருகிறேன்’’ என்றவர், இதில் சின்னச் சின்ன கைவினைப் பொருட்களை வீட்டில் இருந்தபடியே பெண்கள் தயாரிப்பதற்கான பயிற்சியும் அளிப்பதாக தெரிவித்தார்.

‘‘நான் இந்தத் தொழிலை கையில் எடுத்த போது ஒவ்வொரு விஷயத்தையும் நானேதான் தேடித் தேடி தெரிந்து கொண்டேன். எந்த மரம் நன்றாக இருக்கும். அதை எவ்வாறு மெயின்டெயின் செய்யணும். அதை செய்வதற்கான இயந்திரம் மற்றும் வேலையாட்கள் முதற்கொண்டு அனைத்தும் ஒவ்வொன்றாக நானே தெரிந்து கொண்டேன்.

அப்படி இருக்கும் போது வீட்டில் இல்லத்தரசியாக இருக்கும் பெண்கள் மரத்தில் மொபைல் ஸ்டாண்ட், கூடைகள், பொம்மைகள் என அவர்கள் வீட்டில் இருந்தே சிறிய அளவு இயந்திரங்கள் கொண்டு தயாரித்து விற்பனை செய்வது குறித்து பயிற்சி அளிக்க இருக்கிறேன். விருப்பம் உள்ளவர்கள் என்னை அணுகினால் நான் அவர்களுக்கு சொல்லித்தர தயாராக இருக்கிறேன். கஷ்டப்படும் பெண்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கவும் நான் ரெடி’’ என்றவர், மரப்பொருட்களை எவ்வாறு பராமரிக்கலாம் என்று ஆலோசனையும் வழங்கினார்.

‘‘இந்த ைபன் மரப்பொருட்கள் வெயிலிலோ அல்லது அதன் மேல் தண்ணீர் பட்டாலும் ஒன்றுமாகாது. வெளிநாட்டில் உள்ளவர்கள் இந்த மரங்கள் கொண்டு வீடே கட்டுவார்கள். இந்த மரக்
கட்டைகள் ஆறு வகையில் கிடைக்கும். நாங்க அதில் வெளிர் நிற மரக்கட்டைகளை தேர்வு செய்வோம். காரணம், வாடிக்கையாளர்கள் விரும்பும் நிறங்களை அப்போதுதான் நாம் கொடுக்க முடியும். நாங்க இதை டெலிவரி செய்யும் போது பாலீஷ் செய்து கொடுப்போம். என்னதான் தண்ணீரால் இதில் பாதிப்பு ஏற்படாது என்று சொன்னாலும் நம்முடைய பராமரிப்பும் அவசியம். அவ்வப்போது பாலீஷ் செய்தால் 60 ஆண்டுகள் வரை அப்படியே இருக்கும்’’ என்றார் நித்யா.

தொகுப்பு: ஷம்ரிதி

Related Stories: