×

டெல்லி அடுக்குமாடி குடியிருப்பில் ஏசி இயந்திரம் வெடித்து பயங்கர தீ 2 குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழப்பு

புதுடெல்லி: டெல்லி, விவேக் விஹார் பகுதியில் நான்கு மாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளது. நேற்று அதிகாலை 3.48 மணிக்கு குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் ஏ.சி இயந்திரம் வெடித்து தீப்பிடித்தது. தீ மளமளவெனப் பரவியதால், கட்டிடத்திற்குள் இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேற முயற்சித்தனர். ஆனால் அவர்களால் வெளியவர முடியவில்லை. புகை மூட்டத்தில் சிக்கி திணறினர். வீட்டில் இருந்தவர்கள் கூக்குரலிடும் சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். 14 வாகனங்களில் வந்த தீயணைப்பு துறை வீரர்கள் வேகமாக செயல்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதன்பிறகு தீயணைப்பு துறையினர்உள்ளே புகுந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 9 பேர் பரிதாபமாக பலியாகினர். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் தீயில் சிக்கி படுகாயமடைந்த 15-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்தில் கட்டிடத்தின் 2வது மாடியில் வசித்த அரவிந்த் ஜெயின்(60), அவரது மனைவி அனிதா ஜெயின்(58), மகன் நிஷாந்த் ஜெயின்(35), மருமகள் அஞ்சல்(33), பேரன் ஆகாஷ் உயிரிழந்தனர். 3வது மாடியில் வசித்த நிதின் ஜெயின்(50), அவரது மனைவி ஷைலி, மகன் சம்யக் ஜெயின்(25) ஆகியோர் உயிரிழந்தனர். முதல் மாடியில் வசித்த ஷிக்கா ஜெயின்(45) உயிரிழந்தார். அவரது கணவர் நவீன் ஜெயின்(48) பலத்த காயமடைந்தார். இந்த தீ விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Delhi ,AC ,New Delhi ,Vivek Vihar ,
× RELATED புதுச்சேரியில் ஆட்சியை பிடிப்பது யார்? 2 கட்டமாக இன்று வாக்கு எண்ணிக்கை