புதுடெல்லி: இந்திய ஹஜ் குழு வெளியிட்ட ஒரு சுற்றறிக்கையில், மத்திய கிழக்கு நெருக்கடியால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, ஹஜ் யாத்ரீகர்கள் அனைவரும் கூடுதலாக 100 அமெரிக்க டாலர் செலுத்த வேண்டும் என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் பொது செயலாளர் சையது நசீர்ஹூசைன் வெளியிட்டுள்ள பதிவில்,சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சகம் ஹஜ் யாத்ரீகர்கள் மே 15ம் தேதிக்குள் கூடுதல் கட்டணம் ரூ.10,000 செலுத்த வேண்டும் என்று சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்தக் கோரிக்கை முன் அறிவிப்பின்றியும், கலந்தாலோசனையின்றியும் பொருத்தமான நியாயப்படுத்தல் இல்லாமலும் விடுக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்கனவே பலர் முழுத் தொகையையும் செலுத்திவிட்டனர். பலர் ஹஜ் செய்வதற்காக ஏற்கனவே சவுதி அரேபியாவில் உள்ளனர். அரசு தனது சொந்தக் குடிமக்களின் நலனுக்காகச் செயல்பட வேண்டும்.
மேலும் அது சேவை செய்ய வேண்டியவர்களின் சார்பாகப் பேச்சுவார்த்தை நடத்த, தன்னிடம் உள்ள கணிசமான ராஜதந்திர மற்றும் நிறுவன ரீதியான செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். சுற்றறிக்கையை உடனடியாகத் திரும்பப் பெற்று வசூல் செய்த தொகையை திருப்பி தர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
ஒன்றிய அரசு விளக்கம்: ஹஜ் விமான கட்டணம் குறித்து ஒன்றிய சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ எக்ஸ் தளத்தில் பதிவிடுகையில்,மேற்காசிய போரின் காரணமாக, விமான நிறுவனங்கள் ஒரு பயணிக்கு கூடுதலாக 400 அமெரிக்க டாலர்(ரூ.37,964) வேண்டும் என விமான நிறுவனங்கள் கோரின.
பேச்சுவார்த்தை மூலம், யாத்ரீகர்களுக்கு நாங்கள் அதை வெறும் 100 அமெரிக்க டாலராகக் (ரூ.9491)குறைத்தோம். தனியார் நிறுவனங்களைத் தேர்ந்தெடுப்பவர்களுக்கு, இந்த உயர்வு சுமார் 150 டாலராக(ரூ.14236) உள்ளது. அனைவரின் சுமையைக் குறைத்து, ஹஜ் பயணத்தை சுமூகமாகவும் பாதுகாப்பாகவும் உறுதி செய்து வருகிறோம் என்று கூறியுள்ளார்.
