×

மறைந்த முன்னாள் முதல்வரை அவமதித்த பாஜக பெண் எம்பியை எச்சரித்த மூத்த தலைவர்: நடவடிக்கை எடுக்கவில்லை எனில் பதவி விலக முடிவு

கிசார்: அரியானாவில் மறைந்த முன்னாள் முதல்வர் பஜன் லாலை அவமதித்த விவகாரத்தில் பாஜக எம்பி ரேகா சர்மாவுக்கு எதிராக அக்கட்சியின் மூத்த தலைவர் குல்தீப் பிஷ்னோய் போர்க்கொடி தூக்கியுள்ளார்.

அரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்வரான பஜன் லால் மற்றும் அவரது மூத்த மகன் சந்தர் மோகன் ஆகியோர் குறித்து, பாஜக மாநிலங்களவை எம்பி ரேகா சர்மா கடந்த வாரம் சர்ச்சை கருத்துக்களைத் தெரிவித்தார். பஞ்ச்குலாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது பேசிய ரேகா சர்மா, ‘காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இங்கு ரவுடித்தனம் இருந்தது, பஜன் லால் குடும்பத்தினர் தேர்தல்களில் முறைகேடு செய்து வெற்றி பெற்றனர்’ என்று குற்றம் சாட்டினார்.

இதற்குப் பதிலடியாக சந்தர் மோகன் எம்பி ரேகா சர்மாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்நிலையில், நேற்று பஜன் லாலின் இளைய மகனும், முன்னாள் பாஜக எம்பியுமான குல்தீப் பிஷ்னோய் தனது அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் குல்தீப் பிஷ்னோய் கூறுகையில், ‘மாநில பாஜக தலைவர் மோகன் லால் படோலி, எனது தந்தையின் பெயரை மரியாதை இல்லாமல் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் எம்பி ரேகா சர்மா எனது தந்தை குறித்து மிகவும் இழிவாகப் பேசியுள்ளார். பாஜக தலைமையால் இத்தகைய தலைவர்களைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால், நான் முக்கிய முடிவை எடுக்க வேண்டியிருக்கும். அரியானாவில் பாஜக இரண்டு முறை ஆட்சி அமைக்க நான் முக்கியப் பங்காற்றினேன், எனது கட்சியின் 7.5 சதவீத வாக்குகள் பாஜகவிற்கு மாறியது குறிப்பிடத்தக்கது. எனவே, ரேகா சர்மாவுக்கு நோட்டீஸ் அனுப்பி பாஜக தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார்.

Tags : BJP ,Kizar ,Akkad ,Kuldeep Bishnoi ,Reka Sharma ,Bhajan Lal ,Ariana ,Bajan Lal ,
× RELATED நாளை ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்:...