×

நாளை ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: மேற்குவங்கம், கேரளா அசாமில் ஆட்சியை பிடிப்பது யார்…? பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை

கொல்கத்தா: மேற்குவங்கம் உட்பட ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்குவங்கம், அசாம், கேரளா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டு வாக்குப்பதிவு முடிவுற்றது. மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ளது. அங்கு பாஜக தனது முதல் வெற்றியை பதிவு செய்ய தீவிர வியூகம் வகுத்து பிரசாரம் செய்தது.

அந்த மாநிலத்தில் ஏப்., 23 மற்றும் ஏப்., 29ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இதில் ஃபால்டா தொகுதியில் முறைகேடு நடந்த காரணத்தால் அங்கு மட்டும் மே 21ம் தேதி மறுவாக்குப்பதிவு நடத்த ஒன்றிய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக 293 தொகுதிகளுக்கு மட்டும் நாளை முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இங்கு ஆட்சி அமைக்க 148 இடங்கள் தேவைப்படும் நிலையில், கருத்துக்கணிப்புகள் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவுவதை காட்டுகின்றன.

அசாம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 126 தொகுதிகளில் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜக கூட்டணி 64 இடங்களை பிடித்து மூன்றாவது முறையாக ஆட்சியை தக்கவைக்க போராடுகிறது. அங்கு காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி முக்கிய எதிர்க்கட்சியாக களம் கண்டுள்ளது. பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் பாஜக கூட்டணி 85 முதல் 100 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கின்றன. அதேபோல கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி கூட்டணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி இடையே கடும் போட்டி நிலவுகிறது. அங்குள்ள 140 தொகுதிகளில் 71 இடங்கள் பெரும்பான்மைக்கு தேவை என்ற நிலையில், இந்த முறை காங்கிரஸ் கூட்டணி 70 முதல் 75 இடங்களை பெற்று ஆட்சியை பிடிக்கும் என சில கணிப்புகள் வெளியாகியுள்ளதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.

சம்பந்தப்பட்ட மாநிலங்களில் நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, அதன் பின் காலை 10 மணி முதல் செல்போன் மற்றும் இணையதளங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முன்னிலை நிலவரங்கள் வெளியாக தொடங்கும். மதிய நேரத்திற்குள் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பது தெளிவாகிவிடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு அனைத்து மாநிலங்களிலும் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். தேர்தல் முடிவுகள் வந்தவுடன் கொண்டாட்டங்களில் ஈடுபட தொண்டர்கள் தயாராக உள்ள நிலையில், பொதுமக்கள் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உடனுக்குடன் தேர்தல் விபரங்களை தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : West Bengal ,Kerala ,Assam ,Kolkata ,Tamil Nadu ,Puducherry ,Kerala… ,
× RELATED தமிழகத்தில் 234 தொகுதிகளில் வாக்கு...