×

தவெக தலைவர் ஆன்மிக சுற்றுப்பயணம்: வேளாங்கண்ணி பேராலயத்திலும் விஜய் ரசிகர்கள் அத்துமீறல்; சுற்றுசுவர், சாரத்தில் ஏறி அட்டகாசம்: பிரார்த்தனைக்கு வந்த இறைமக்கள் அவதி

நாகை: வேளாங்கண்ணி, நாகூர் தர்காவில் தரிசனம் செய்ய விஜய் இன்று வேளாங்கண்ணி வர உள்ளதாக தகவல்கள் வெளியானதால் வேளாங்கண்ணி பேராலயத்தில் அதிகாலை 3 மணிக்கே விஜய் ரசிகர்கள், தவெக தொண்டர்கள் குவிந்ததால் திருப்பலி (பிரார்த்தனை) நடத்துவதில் சிரமம் ஏற்பட்டது. காம்பவுண்ட் சுவர், பேராலய கட்டிட சாரங்களில் ஏறி நின்று விஜய் ரசிகர்கள் அத்துமீறல்களில் ஈடுபட்டதால் பேராலயத்துக்கு வந்த இறைமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.

தமிழக சட்டசபை தேர்தலில் நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக்கழகம் 233 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டது. வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள்(மே 4ம் தேதி) நடைபெற உள்ள நிலையில், தேர்தலில் தங்கள் கட்சி வேட்பாளர்கள் மற்றும் தான் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டி விஜய் சர்வ மத ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். சில நாட்களுக்கு முன்பு திருச்செந்தூர் முருகன் கோயிலில் கையில் வேலுடன் சென்ற விஜய், அதிகாலையில் நடந்த விஸ்வரூப தரிசனத்தில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். அதனைத்தொடர்ந்து மறுநாள் மராட்டிய மாநிலம் ஷீரடியில் உள்ள சாய்பாபா கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார்.

இந்நிலையில் தனது ஆன்மிக பயணத்தின் தொடர்ச்சியாக நாகை மாவட்டம் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை பேராலயத்திற்கும், நாகூர் ஆண்டவர் தர்காவிற்கும் இன்று (2ம் தேதி) விஜய் வருகை தர இருப்பதாக தகவல் வெளியானது. இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு வரும் அவர் பின்னர் அங்கிருந்து காரில் சாலை மார்க்கமாக வேளாங்கண்ணிக்கு வருகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் விஜய் இன்று காலை வருகை தர உள்ளதாக தகவல் பரவியதால் வேளாங்கண்ணி பேராலயத்தில் அதிகாலை 3 மணி முதல் தொண்டர்கள், ரசிகர்கள் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குவிந்தனர். 5 மணிக்கு பேராலயம் திறக்கப்பட்டு 5.40 மணிக்கு முதல் திருப்பலி நடைபெறுவது வழக்கம். ஆனால் 5 மணிக்கு பேராலயத்தை திறந்தபோது தவெக ரசிகர்கள் குவிந்ததால் நெரிசல் ஏற்பட்டது.

மேலும், ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் பேராலயத்தின் சுற்றுச்சுவர்களில் ஏறி குதித்து ஆலயத்துக்குள் வந்தனர். சிறுவர்கள், சிறுமிகள் முகப்பிலிருந்த செருப்பு ஸ்டாண்டுகளிலும், பேராலய முகப்பு கட்டிடத்தில் பழுதுபார்ப்பு பணிக்காக கட்டப்பட்டிருந்த சாரத்திலும் ஏறி நின்றும், பேராலயத்துக்குள்ளும் ஜன்னல்கள், சுவர்களில் ஏறி நின்று அத்துமீறல்களில் ஈடுபட்டனர். இதனால் வழிபாட்டுக்கு வந்த இறைமக்கள் பேராலய ஊழியர்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினர். அதிகாலை 5.40 மணிக்கு திருப்பலி தொடங்க வேண்டும் என்பதால் கூட்டத்தை கட்டுப்படுத்த பேராலய நிர்வாகத்தினர் காலை 5.15 மணி அளவில் ஒலிபெருக்கி மூலம், நடிகர் விஜய் வருவதாக இதுவரை எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை. வழிபாட்டுக்கு இடையூறு செய்யாதீர்கள், அப்படி அவர் ஒருவேளை வந்தால், அவருடன் நீங்களும் பிரார்த்தனையில் கலந்துகொள்ளலாம். திருப்பலி நடத்த ஒத்துழைப்பு அளிக்கும்படி அறிவுறுத்தினர். இதனால் இன்று விஜய் வருவார் என அதிகாலை 3 மணி முதல் காத்திருந்த நிலையில், 6 மணிக்கு மேலாகியும் அவர் வராததால் ரசிகர்களும், தவெக தொண்டர்களும் ஏமாற்றம் அடைந்தனர். இந்தக் களேபரங்களுக்கு இடையே ஒருவழியாக 5.40 மணிக்கு திருப்பலி வழக்கம்போல் நடந்தது.

இந்நிலையில் நாகூரில் விஜய் ரசிகர்கள் ஒரு சிலரே வந்ததால் அங்கு இடையூறின்றி தொழுகை நடந்தது. இதுதொடர்பாக வேளாங்கண்ணி போலீசார் கூறுகையில், விஜய், வேளாங்கண்ணி வருவதாக எங்களுக்கு எந்த தகவலும் இல்லை என்றனர். தேர்தலுக்கு முன்னால் பிரசாரம் செய்கிறேன் என்று பொதுமக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்திய தவெக தலைவர் விஜய், இப்போது ஆன்மீக சுற்றுப்பயணம் என்ற பெயரால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்துகிறார் என்றே பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags : Vijay ,Velangani Baralaya ,Atakasam ,Nagai ,Velangani ,Nagore Targa ,Taweka ,Velangani Palace ,Tirupali ,
× RELATED சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த மாதத்தில் மட்டும் 90.18 லட்சம் பேர் பயணம்