×

நூல் விலை ரூ.7 உயர்வு; ஐந்து மாதத்தில் ரூ.41 அதிகரிப்பு: தொழில் துறையினருக்கு பேரிடி

திருப்பூர்: நூல் விலை ரூ.7 உயர்த்தப்பட்டுள்ளது. இது தொழில் துறையினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் மேற்கு மண்டலங்களான கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஜவுளி, ஆயத்த ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பிரதான தொழிலாக இருந்து வருகிறது. திருப்பூரில் மட்டும் ஆயத்த ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள் பல்லாயிரக்கணக்கில் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவிலிருந்து பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யக்கூடிய ஆயத்த ஆடைகளின் சுமார் 68 சதவீதத்திற்கும் அதிகமான உற்பத்தி திருப்பூரில் நடைபெற்று வருகிறது.

ஆயத்த ஆடை உற்பத்தியில் முக்கிய பங்காற்றுவது நூல் ஆகும். பருத்தி விலையை பொறுத்து நூல் விலையில் அவ்வப்போது மாற்றங்கள் இருக்கும். கடந்த பிப்ரவரி நூல் விலை ரூ.7 உயர்ந்திருந்தது. இதைத் தொடர்ந்து மார்ச் 16ம் தேதி மேலும் ரூ.7 அதிகரித்தது. இந்நிலையில், ஏப்ரல் 1ம் தேதி நூல் விலையை 10 ரூபாய் உயர்த்தி வெளியிடப்பட்டது. கடந்த 16ம் தேதி மீண்டும் அனைத்து ரக நூல்களுக்கும் ரூ.10 உயர்த்தி நூற்பாலைகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இதுவரை சுமார் ரூ.34 வரை நூல் விலை உயர்ந்திருப்பதால், பின்னலாடை உற்பத்தி துறையினர் அதிர்ச்சியில் இருந்தனர்.

தற்போது நடப்பு (மே) மாதத்திற்கான நூல் விலையை நூற்பாலைகள் அறிவித்துள்ளது. அதன்படி, அனைத்து ரகங்களுக்கும் ரூ.7 உயர்த்தி விலையை அறிவித்துள்ளது. இதனால் கடந்த 5 மாதத்தில் மட்டும் நூல் விலை ரூ.41 உயர்ந்துள்ளது. ஈரான், இஸ்ரேல் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால், பாலிஸ்டர் நூல் மற்றும் துணிகளின் விலை உயர்ந்து வரும் இச்சூழ்நிலையில் மீண்டும் நூல் விலை உயர்வடைந்துள்ளது தொழில்துறையினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து தொழில்துறையினர் கூறுகையில், பின்னலாடை உற்பத்திக்கான மிக முக்கிய மூலப்பொருளான நூல் விலை கடந்த 5 மாதத்தில் 41 ரூபாய் வரை உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஐந்து மாநில தேர்தலுக்குப் பிறகு நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில், தேர்தல் முடிவுகளுக்கு முன்பாகவே நூல் விலை உயர்ந்திருப்பது அதிர்ச்சிகரமாகவே உள்ளது என்றனர்.

Tags : Tiruppur ,Tamil Nadu ,Coimbatore ,Erode ,Karur ,
× RELATED சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த மாதத்தில் மட்டும் 90.18 லட்சம் பேர் பயணம்