மாட்ரிட் ஓபன் மகளிர் பைனலில் அம்பாய் பாயும் மார்தா அனலை கக்கும் மிரா: மகுடம் சூட இன்று மல்லுக்கட்டு

மாட்ரிட்: மாட்ரிட் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் அரையிறுதிப் போட்டியில் நேற்று, உக்ரைன் வீராங்கனை மார்தா கோஸ்ட்யுக் அபார வெற்றி பெற்றார். இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் மார்தா, ரஷ்ய வீராங்கனை மிரா ஆண்ட்ரீவா மோதவுள்ளனர். ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் அரையிறுதிப் போட்டியில் உக்ரைன் வீராங்கனை மார்தா கோஸ்ட்யுக், ரஷ்ய வீராங்கனை அனஸ்டாசியா போடபோவா உடன் மோதினார்.

முதல் செட்டில் துடிப்புடன் ஆடிய மார்தா 6-2 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வென்றார். 2வது செட்டில் சுதாரித்து ஆடிய போடபோவா, 6-1 என்ற புள்ளிக் கணக்கில் வென்று அந்த செட்டை கைப்பற்றினார். அதைத் தொடர்ந்து வெற்றியை தீர்மானிக்கும் வகையில் நடந்த 3வது செட்டில் மீண்டும் மார்தாவின் கை ஓங்கியது. அந்த செட்டை 6-1 என்ற புள்ளிக் கணக்கில் அட்டகாசமாக அவர் வசப்படுத்தினார். அதனால், 2-1 என்ற செட் கணக்கில் வெற்றி வாகை சூடிய அவர் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

முன்னதாக நேற்று முன்தினம் இரவு நடந்த மற்றொரு அரையிறுதிப் போட்டியில் அமெரிக்க வீராங்கனை ஹேலி பாப்டிஸ்ட், ரஷ்ய இளம் வீராங்கனை மிரா ஆண்ட்ரீவா மோதினர். முதல் செட்டை 6-4 என்ற புள்ளிக் கணக்கில் ஆண்ட்ரீவா எளிதில் வென்றார். அதைத் தொடர்ந்து நடந்த 2வது செட்டில் இருவரும் சளைக்காமல் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் டை பிரேக்கர் வரை நீண்டது. அந்த செட்டை 7-6 (10-8) என்ற புள்ளிக் கணக்கில் ஆண்ட்ரீவா போராடி கைப்பற்றினார். அதனால், அவர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதையடுத்து, இன்று நடக்கும் இறுதிப் போட்டியில் மிரா ஆண்ட்ரீவா – மார்தா கோஸ்ட்யுக் களம் காணவுள்ளனர்.

Related Stories: