×

கொத்தடிமை வழக்குகளில் விரைந்து தண்டனை தமிழக அரசு, தலைமை குற்றவியல் வழக்கறிஞருக்கு பாராட்டு: சர்வதேச நீதி மிஷன் கடிதம்

சென்னை: கொத்தடிமை வழக்குகளில் தண்டனை பெற்றதில் சிறப்பு சாதனை படைத்ததற்காக தமிழக அரசு மற்றும் மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னாவுக்கு சர்வதேச ஜஸ்டிஸ் மிஷன் பாராட்டு தெரிவித்துள்ளது. கொத்தடிமைத் தொழிலாளர்களை மீட்பது, அவர்களுக்கு மறுவாழ்வு வழங்குவது மற்றும் கொத்தடிமை முறையை ஆதரிக்கும் குற்றவாளிகளுக்கு எதிரான வழக்குகளில் சிறப்பு கவனம் செலுத்தி தொடர்ச்சியான சுற்றறிக்கைகள் மூலம் விரைவான தண்டனை பெற்றுத் தர நடவடிக்கை எடுத்தது ஆகியவற்றுக்காக தமிழக அரசுக்கும், அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து செயல்பட்ட மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னாவுக்கும் பாராட்டு தெரிவித்து சர்வதேச ஜஸ்டிஸ் மிஷன் (சர்வதேச நீதி மிஷன்) கடிதம் அனுப்பியுள்ளது.

சர்வதேச நீதி மிஷன் ஒரு அரசு சாரா தொண்டு நிறுவனம். கொத்தடிமை முறையில் பாதிக்கப்பட்டோருக்காக தமிழ்நாடு மாநில ஜூடிசியல் அகாடமி நடத்தும் ஆய்வரங்குகளில் சர்வதேச நீதி மிஷன் தொடர்ந்து பங்களித்து வருகிறது.
தமிழக அரசுக்கு சர்வதேச நிதி மிஷனின் தமிழ்நாடு மாநிலத்தின் அட்வகெஸி பிரஸிடெண்ட் ரேச்சல் பிரசன்னா, மாநில அரசு தலைமை குற்றவியியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், மாநில அரசு தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, சிறப்பு கவனம் செலுத்தி, மாநில காவல்துறை மற்றும் குற்ற வழக்கு தொடர்வு இயக்கக வழக்கறிஞர்களுடன் இணைந்து, கொத்தடிமை தொழிலாளர் வழக்குகளில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தருவதில் முனைப்புடன் செயல்பட்டுள்ளார்.

கடந்த 2025ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 2026 ஏப்ரல் வரை உள்ள காலகட்டத்தில் மட்டும் 12 கொத்தடிமை தொழிலாளர் வழக்குகளில் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஜூடிசியல் அகாடமி மற்றும் நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, சி.சரவணன் ஆகியோரின் ஊக்கத்துடன் கொத்தடிமைத் தொழிலாளர் ஒழிப்பை முன்னெடுக்க நீதிபதிகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது. கொத்தடிமை தடுப்பு வழக்குகளில் குற்றவாளிகளுக்கு 60 நாட்களுக்குள் வழக்கை முடிப்பதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டு சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொத்தடிமைத் தொழிலாளர் முறையை ஒழிப்பதில் அரசு காட்டும் முனைப்பையும், பாதிக்கப்பட்டோருக்கு மறுவாழ்வு அளிப்பதில் மேற்கொள்ளப்படும் விழிப்புணர்வு முயற்சிகளையும், கொத்தடிமைத் தொழிலாளர் ஒழிப்புச் சட்டத்தின் கீழ் அவர்களை சமூகத்தில் மீளச் சேர்க்கும் பணிகளையும் பாராட்டி அரசு குற்றவியல் வழக்கறிஞர்கள், குற்ற வழக்குத் தொடர்வு இயக்ககம், நீதித்துறை, காவல்துறை மற்றும் தமிழ்நாடு மாநில ஜூடிசியல் அகாடமி ஆகியவற்றின் ஒருங்கிணைந்த செயல்பாட்டின் மூலம் இம்முறையால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய நீதி கிடைத்திருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu government ,International Justice Mission ,Chennai ,Asan Mohammed Jinnah ,
× RELATED 200 கி.மீ சுற்றளவில் கண்காணிக்கும்...