சேலம்: வர்த்தக சிலிண்டர் விலை அதிரடியாக ஒரே நாளில் ரூ.1000 உயர்ந்துள்ளது ஓட்டல் உரிமையாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இதுபற்றி சேலம் மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் பழனிசாமி கூறியதாவது:
அமெரிக்கா- ஈரான் போருக்கு முன் வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.1,850 என விற்பனை செய்யப்பட்டது. இன்று நிலவரப்படி ரூ.3,200 என்று விலை அதிகரித்துள்ளது. கடந்த இரண்டரை மாதத்தில் ஒரு சிலிண்டருக்கு ரூ.1,350 வரை விலை கூடியுள்ளது. பெரிய ஓட்டல்களுக்கு நாள் ஒன்றுக்கு 4 முதல் 5 சிலிண்டரும், நடுத்தர ஓட்டல்களுக்கு 2 முதல் 3 சிலிண்டர் தேவைப்படுகிறது.
சிலிண்டர் தட்டுப்பாட்டால் ஏற்கனவே 15 சதவீதம் டீ கடைகள் மூடப்பட்டுள்ளன. சிறிய ஓட்டல்கள், கையேந்தி பவன் உள்ளிட்ட ஓட்டல்கள் வாரத்தில் 2 நாட்கள் செயல்படுவதில்லை. நாங்கள் தொழிலை தொடர்ந்து நடத்த வேண்டும், எங்களை நம்பியுள்ள வாடிக்கையாளர்களுக்கு தங்கு தடையின்றி உணவு வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஓட்டல் உரிமையாளர்கள் பலர் ராக்கெட் அடுப்பு, விறகு அடுப்புக்கு மாறியுள்ளனர். தற்போது ராக்கெட் அடுப்புக்கும் டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. ஆர்டர் கொடுத்து இரண்டு மாதமாகியும் இன்னும் விநியோகம் செய்யப்படவில்லை.
மாநகர பகுதியில் விறகுக்கடைகள் இல்லை. மாநகர வெளிப்பகுதிக்கு சென்று தான் விறகு விலை வாங்கி உணவுப்பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. அதுவும் காய்ந்த விறகு கிடைப்பதில்லை. ஈரமாக கிடைப்பதால் தொழிலாளர்கள் வேலை செய்ய கஷ்டப்படுகின்றனர். சில நேரங்களில் அவர்கள் வேலைக்கு வருவதில்லை.
காஸ் சிலிண்டர் விலை அதிகரிப்பு தொடர்பாக விரைவில் ஓட்டல் உரிமையாளர்கள் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தவுள்ளோம். அதில் உணவுப்பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்துவது ெதாடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது. உணவுப்பொருட்களின் விலை கூடினால் வாடிக்கையாளர்கள் தான் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். அவர்களின் வருகை கணிசமாக குறையும். சிலிண்டர் விலை குறைந்து, சீரான முறையில் விநியோகம் செய்தால் இந்த பாதிப்பு ஏற்படாது. இல்லை என்றால் உணவுப்பொருட்களின் விலை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இவ்வாறு பழனிசாமி கூறினார்.
