களக்காடு: நெல்லை மாவட்டம் களக்காடு அருகேயுள்ள கீழ துவரைகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (45). இவர் நேற்று முன்தினம் காருக்கு பெட்ரோல் நிரப்புவதற்காக புறப்பட்டார். அப்போது உறவினரான 17 வயது சிறுவன் தான் காரை ஓட்டிச்சென்று பெட்ரோல் நிரப்பி வருகிறேன் என்று கூறியுள்ளார். முருகனும் அவரிடம் காரை கொடுத்துள்ளார். அவர், உறவினர்களின் குழந்தைகளான ஹன்சிகா (4), தினேஷ் (10), பிரதீப் (9), லித்திஷ் (8) ஆகியோரை காரில் ஏற்றிக் கொண்டு சென்றார். பெட்ரோல் போட்டுவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். களக்காடு அருகே மங்கம்மாள் சாலையில் கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து நொறுங்கியது. இதில் சிறுமி ஹன்சிகா சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பலியானார். காரை ஓட்டி சென்ற சிறுவன் உள்பட 4 பேரும் படுகாயமடைந்தனர். உறவினர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைகளில் அனுமதித்தனர். இதுகுறித்து களக்காடு போலீசார், காரை ஓட்டி வந்த சிறுவன், காரின் உரிமையாளர் முருகன் ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
