சென்னை: மின் கம்பியில் விழுந்த நுங்கை எடுக்க முயன்றபோது டிரான்ஸ்பார்மர் வெடித்து தீப்பற்றி எரிந்ததில் உடல் கருகி 2 கல்லூரி மாணவர்கள் பரிதாபமாக பலியாகினர். ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சிறுமாங்காடு கிராமத்தை சேர்ந்தவர்கள் டெல்லி கணேஷ் (17), தட்சணாமூர்த்தி (17). இருவரும், தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தனர். 2 பேரும் நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் சேர்ந்து, அதே பகுதியில் உள்ள பனை மரத்தில் இருந்து நுங்கு அறுப்பதற்காக சென்றுள்ளனர்.
அங்கு, மின்சார டிரான்ஸ்பார்மர் அருகில் உள்ள பனைமரத்தில் நுங்கு அறுத்துள்ளனர். அப்போது, எதிர்பாராதவிதமாக டிரான்ஸ்பார்மர் மின் கம்பியில் மாட்டிக் கொண்ட நுங்கை எடுக்க முயன்றபோது திடீரென டிரான்ஸ்பார்மர் வெடித்து சிதறியுள்ளது. இதில் டிரான்ஸ்பார்மர் அருகே நின்றிருந்த டெல்லி கணேஷ், தட்சிணாமூர்த்தி ஆகிய 2 பேர் மீதும் தீப்பற்றி எரிந்துள்ளது.
அதிர்ச்சியடைந்த சக நண்பர்கள், உடல் முழுவதும் கருகிய நிலையில் இருந்த 2 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சுங்குவார்சத்திரம் போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
