×

கர்நாடக முதல்வராக கார்கே பதவியேற்றால் வரவேற்போம்: அமைச்சர் பரமேஸ்வர் புதிய வியூகம்

பெங்களூரு: காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரான மல்லிகார்ஜுன கார்கே மாநிலத்தின் முதல்வரானால் வரவேற்போம் என்று மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சியமைந்து 3 ஆண்டுகள் முடிவடையவுள்ள நிலையில், துணை முதல்வர் டி.கே.சிவகுமார் முதல்வர் பதவியை அடைய முயற்சித்து வருகிறார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரான கர்நாடகாவை சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கேவுக்கு மாநிலத்தின் முதல்வராகும் விருப்பம் இருக்கிறதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் பரமேஸ்வர், ‘மல்லிகார்ஜுன கார்கே மாநிலத்தின் முதல்வரானால், நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைவோம். மிக அதிக அனுபவம் வாய்ந்த மூத்த அரசியல் தலைவர் கார்கே. அதனால் அவர் முதல்வரானால் நாங்கள் வரவேற்போம்’ என்றார்.

முதல்வர் மாற்றம் விவகாரத்தில் இவ்வளவு குழப்பங்கள் நிலவும் நிலையிலும், இதற்கு தீர்வு காண்பதில் தாமதம் ஏன்? தலித் முதல்வரை நியமிக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறாரா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் பரமேஸ்வர், ‘ஊடகங்களில் வெளிவரும் முதல்வர் மாற்றம் குறித்த விவகாரம் பற்றி என்னிடம் அதிக தகவல்கள் இல்லை. எனக்கு அதுகுறித்து விரிவாகவும் தெரியாது. எனவே அது பற்றி பேசுவது சரியல்ல. கர்நாடகாவைச் சேர்ந்த கார்கே, காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவராக இருப்பது நமது அதிர்ஷ்டம். கார்கே மிகச்சிறந்த அனுபவசாலி. அவருக்கு மாநில அரசியல் சூழல் முழுமையாக தெரியும். அவருக்கு யாரும் எதுவுமே சொல்ல வேண்டிய அவசியமே கிடையாது. அதனால் அவர் முதல்வராக விரும்பினால் வரவேற்போம்’ என்றார். சித்தராமையா, டி.கே.சிவகுமார் இடையே முதல்வர் போட்டி நடந்துவரும் வேளையில் உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் புதிய வியூகம் வகுத்து கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Kharge ,Karnataka ,Chief Minister ,Minister ,Parameshwar ,Bengaluru ,Congress party ,Mallikarjun Kharge ,State ,Congress government ,Siddaramaiah ,Deputy ,D.K. Shivakumar ,
× RELATED திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய...