புதுடெல்லி: சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரத்தில் கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ம் தேதி வழங்கிய தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் தொடர்பான வழக்கானது பத்தாவது நாளாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து சீராய்வு மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங்,‘‘இந்த விவகாரத்தை பொருத்தமட்டில் ஒரு சாதாரணச் சட்டத்தை நாம் வாசிப்பது போன்று ஒரு தேசத்தின் அரசியலமைப்புச் சட்டத்தை வாசித்து விடக்கூடாது. எந்தவொரு மதப் பழக்கமோ அல்லது சம்பிரதாயமோ, பிரிவு 15-ல் சொல்லப்பட்டுள்ள தடை செய்யப்பட்ட பாகுபாடுகளுக்குள் வந்தால், அதற்கு நீதிமன்றம் பாதுகாப்பு அளிக்கக் கூடாது. சபரிமலையில் சாதி அடிப்படையில் ஆண்களுக்குத் தடை இல்லை. ஆனால் பெண்களுக்குத் வயது அடிப்படையில் தடை இருக்கிறது என்று தெரிவித்தார்.
இதையடுத்து அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள்,‘‘சபரிமலையில் சாதி ரீதியாக யாரையும் தடுக்கவில்லை. மாறாக 10 முதல் 50 வயது வரம்பிற்குள் இருப்பதால் மட்டுமே தடுக்கப்படுகிறார்கள். அது ஐதீகம் என்று அவர்களது தரப்பில் தெரிவிக்கப்படுகிறது என்று கூறினர். அதற்கு பதிலளித்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், ‘‘பத்து முதல் ஐம்பது வயது என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிகவும் ஆக்கபூர்வமான மற்றும் வளமான காலம் ஆகும். ஒரு பெண்ணை 10 வயது வரை வாழுங்கள், பிறகு 50 வயதிற்கு மேல் வாழுங்கள், இடையில் உள்ள 40 ஆண்டுகளைத் தவிர்த்துவிடுங்கள் என்று சொல்ல முடியுமா?. இது ஒரு மனிதனின் வாழ்க்கையில் பாதியைப் பறிப்பதற்குச் சமம். மிகப்பெரிய உரிமை மீறல் ஆகும். குறிப்பாக கடந்த 2018ம் ஆண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அமலில் இருந்தபோது, பிந்து மற்றும் கனகதுர்கா ஆகிய இரு பெண்கள் மட்டுமே மலை ஏறி தரிசனம் செய்தனர். அவர்கள் தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்ததும், சில தலைவர்கள் கோயில் தீட்டாகிவிட்டதாகக் கூறி சுத்தம் செய்ய சடங்குகளை மேற்கொண்டனர். என்று விளக்கமளித்தார்.
இதைத்தொடர்ந்து குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘தரிசனம் செய்த அந்தப் பெண்கள் இருவரும் உண்மையான பக்தர்களா?. தீர்ப்பிற்கு முன்னதாக அவர்கள் கோயிலுக்குச் சென்றுள்ளனரா என்று கேள்வி எழுப்பினார். மீண்டும் அதற்கு பதிளித்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், ‘‘பிந்து கேரளாவைச் சேர்ந்த இந்துப் பெண். அவருக்கு 11 வயதாக இருக்கும்போதே அவரது தாயார் அவரைச் சபரிமலைக்கு அழைத்துச் சென்றுள்ளார். எனவே அவர் ஒரு பக்தர் என்பதில் சந்தேகமில்லை. கனகதுர்கா தனது மனசாட்சியின்படி தரிசனம் செய்யச் சென்றார். அவர் ஒரு வழக்கறிஞரும் ஆவார். தரிசனம் செய்ததற்காக அந்தப் பெண்கள் சமூகப் புறக்கணிப்புகளை அனுபவித்தனர்.
தற்போதைய சூழலில் கனகதுர்காவால் கேரளாவில் வசிக்க முடியாத நிலை உள்ளது. ஒருகட்டத்தில் அவர் இந்தியாவை விட்டே வெளியேறவும் யோசித்தார். இதில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு அமலில் இருந்தும், அதற்குப் பிறகு எந்தப் பெண்ணும் தரிசனம் செய்ய முடியாததற்குக் காரணம் மாநில அரசு பாதுகாப்பு அளிக்கத் தவறியதே ஆகும். நீதிபதிகள் கூறுகையில், குறிப்பாக சபரிமலை கோயிலுக்குள் நுழைய அனுமதி கோருபவர்கள் யார் என்பதை நாம் பார்க்க வேண்டும். ஐயப்பனின் மீது உண்மையான பக்தி கொண்ட பெண்கள், 50 வயது அடையும் வரை காத்திருப்பார்கள், அதுவரை அவர்கள் கோவிலுக்கு செல்ல மாட்டார்கள் என்று கருதது தெரிவித்தனர். இதையடுத்து வழக்கின் அடுத்த விசாரணை வரும் 5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
* தமிழ் மொழியில் 247 எழுத்துக்கள் உள்ளன: சமஸ்கிருதத்தை உயர்த்தி பேசிய வக்கீலுக்கு நீதிபதி மகாதேவன் குட்டு
விசாரணையின் போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா, அனைத்து மதங்களும் ஒன்றல்ல எனக் கூறி சில இந்து மத நூல்களில் இருக்கும் தகவல்களையும், சமஸ்கிருத மொழியையும் உயர்த்திப் பேசினார். அவரை தடுத்த தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதிபதி ஆர்.மகாதேவன், ‘‘விவாதித்துக் கொண்டிருக்கும் முதன்மை விஷயத்தில் இருந்து நீங்கள் தாண்டிச் செல்கிறீர்கள். உலகின் மிகச்சிறந்த மொழிகளில் ஒன்றான சமஸ்கிருதத்தில் 52 எழுத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்டீர்கள். அதே போல, தமிழ் மொழியில் 247 எழுத்துக்கள் உள்ளன. எனவே அந்த விவாதத்திற்குள் செல்ல வேண்டாம். வழக்கின் முதன்மை விவகாரத்திற்கான வாதத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள்’’ என்றார். கன்னட மொழியிலும் 52 எழுத்துக்கள் இருப்பதாக கூறிய நீதிபதி நாகரத்னா, நீதிமன்றத்தில் பேசிக் கொண்டிருப்பதை நினைவில் கொள்ளுமாறு வழக்கறிஞரை எச்சரித்தார். இதுபோன்று வாதிட வேண்டாம் என்றும், இது நாகரீகமான முறையில் இல்லை என்றும் மற்றொரு நீதிபதி சுந்தரேஷ் கண்டனம் தெரிவித்தார்.
