×

கவுன்சலிங் ரூம்

நன்றி குங்குமம் டாக்டர்

மருத்துவப் பேராசிரியர் முத்தையா

எனக்கு 53 வயதாகிறது. மெனோபாஸ் தொடங்கிவிட்டது. தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். உடல் எப்போதும் மிகவும் சோர்வாக உள்ளது. நான் சப்ளிமென்ட்டுகள் எடுத்துக் கொள்ளலாமா.. எந்தெந்த சப்ளிமென்ட்டுகள் நான் எடுத்துக் கொள்ள வேண்டும். – லட்சுமி, சென்னை.

மெனோபாஸ் என்பது மாதவிடாய் முழுவதுமாக நிற்கும் ஒரு காலகட்டம். இது, பொதுவாக பெண்களுக்கு 45 முதல் 50 வயதினில் ஏற்படும். இந்த மெனோபாஸ் காலங்களில் ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தால், பெண்களுக்குப் பலவிதமான மனம் மற்றும் உடல் சார்ந்த மாற்றங்கள் நிகழும். உடலில் ரத்த நாளங்களில் மாற்றம் ஏற்படும். அது சார்ந்த அறிகுறிகள் தோன்றும். ஈஸ்ட்ரோஜன் வெளியேற்றத்தால் மனஅழுத்தம், சோர்வு, எரிச்சல், தூக்கமின்மை, அதிக அளவிலான வியர்வை போன்றவை ஏற்படும். இந்தத் தருணங்களில் குடும்பத்தினரின் ஆதரவும் மற்றும் அவர்களின் ஒத்துழைப்புமே சிறந்த மருந்தாகும்.

மருத்துவர் பரிந்துரையின்படி தினமும் வைட்டமின் இ 400 எடுத்துக் கொள்ளலாம். வைட்டமின் டி மற்றும் கால்சியம் எலும்புத் தேய்மானத்தைத் தடுக்கிறது. கடுமையாக பாதிப்புகளுக்கு உள்ளானவர்களுக்கு மட்டும் ஹார்மோன் மாற்று சிகிச்சை செய்யப்படுகிறது. இவர்களுக்கு தினமும் ப்ரிமரின் (Premarin) 0.625mg அல்லது 1.25mgs போன்ற ஈஸ்ட்ரோஜன்கள் மற்றும் மேட்ராக்ஸிப்ரோகெஸ்ட்ரோன் (Medroxyprogestrone) ஒவ்வொரு சுழற்சியின் கடைசி 10 நாட்களுக்கும் கொடுக்கப்படுகிறது. ஆனால், இதெல்லாம் கடும் பாதிப்பு உடையவர்களுக்குத்தான். உங்கள் வீட்டருகே உள்ள மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

எனக்கு 35 வயதாகிறது. சமீபமாக உடல்வலி இருந்துவருகிறது. குறிப்பாக, முதுகுப்பகுதியில் அடிக்கடி வலி இருக்கிறது. தினமும் என் மகனை, உடலை மிதித்துவிடச் சொல்கிறேன். அப்படி செய்தால், நன்றாக இருப்பதாக உணர்கிறேன். இப்படி அடிக்கடி உடலை மிதித்துவிடலாமா? இதனால் ஏதாவது பாதிப்பு ஏற்படுமா? – ரா.சரவணன், கோவை.

குழந்தைகளை மிதிக்கச் சொல்வது ஒருவிதத்தில் மசாஜ் செய்வது போலத்தான். எப்போதாவது ஒருநாள்தான் வலி இருக்கிறது என்றால், இந்த முறையைப் பயன்படுத்தலாம் தவறு இல்லை. ஆனால், நாள்பட்ட வலியாய் இருந்தாலோ அதிக வலியாய் இருந்தாலோ மிதிக்கவிடச் சொல்லிக் கொண்டே இருப்பது நல்லது அல்ல. அது உடலில் ஏற்பட்டிருக்கும் ஓர் உபாதையை அலட்சியம் செய்வதாகவே இருக்கும்.

குழந்தைகளுக்கு உடலைக் குறித்து அதிகம் தெரியாது என்பதால், அவர்களிடம் மிதித்துவிடச் சொல்வது சரியானது அல்ல. ஏனெனில், தவறான இடத்தில் மிதிக்கும்போது அந்த இடம் பாதிப்படையலாம். மேலும், முதுகுத்தண்டுவடத்தில் பிரச்னை இருக்கும்போது மிதித்து விடச்செய்தால் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும். அதேபோல், இணைப்புகளில் மிதிக்கும்போது பிசகி விட்டாலும் பிரச்னையே, எனவே, ஓரிரு நாட்களுக்கு மேல் வலி இருந்தாலோ, அதிக வலி இருந்தாலோ தாமதிக்காமல் மருத்துவரை அணுகுவதுதான் பாதுகாப்பானது. இதுபோன்ற எளிய வைத்தியங்கள் பலன் தராது.

என் குழந்தைக்கு இரண்டு வயதாகிறது. திடீரென வயிற்றுப் போக்கால் அவதிப்படுகிறான். டாக்டர் அவனுக்கு ஜியார்டியாசிஸ் பாதிப்பு என்கிறார். ஜியார்டியாசிஸ் என்றால் என்ன? இது ஏன் ஏற்படுகிறது இதைத் தடுக்க முடியுமா! – கவிதா, மதுரை.

ஜியார்டியாசிஸ் எனப்படுவது குடலில் உருவாகும் நுண்ணிய ஒட்டுண்ணித் தொற்று, சிறுநீர், மலம் போன்றவை கலந்த சுத்த மற்ற கிணறு, ஏரி, குளம், ஆற்று நீரில் ஜார்டியா எனும் நுண் கிருமி இருக்கும். இது, ஒரு செல் உயிரி வகையைச் சேர்ந்தது. சுகாதார மற்ற நீரில் புழங்கும்போது, நமது உடலுக்குள் செல்லும் இந்த நுண் கிருமியால் ஏற்படும் பிரச்னையை ஜியார்டியாசிஸ் என்கிறோம். இதனால், வயிற்று உப்புசம், வயிற்றுவலி, மலம் நுரைத்து வெளியேறுதல், வயிற்றுப்போக்கு, உணவில் இருந்து சத்துகளை முழுமையாகக் கிரகிக்க முடியாத நிலை போன்ற பாதிப்புகள் ஏற்படும். பொதுவாக, இந்தப் பிரச்னை மூன்று முதல் ஆறு வாரங்களில் தானாகவே சரியாகிவிடும்.

ஆனால், குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு நீடித்தால், நீரிழப்பு ஏற்பட்டு, உடல்சோர்வு, ஊட்டச்சத்துக் குறைபாடு போன்ற பிரச்னைகள் ஏற்படும் என்பதால், இதற்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும். மேலும், நீரை வடிகட்டி, காய்ச்சி அருந்த வேண்டும் சுகாதாரமற்ற இடங்களில் புழங்குவதைத் தவிர்க்க வேண்டும். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வயிற்றைச் சுத்தம் செய்து, ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது நல்லது.

Tags : Saffron ,Dr. ,Muthaya ,
× RELATED சப்போட்டாவின் மருத்துவ குணங்கள்!