நன்றி குங்குமம் தோழி
கடந்த இருபது வருடங்களாக நம் உடல் எடை சார்ந்து பல வண்ணங்களில் தொடர்ந்து விதவிதமான கருத்துக்களும், உணவு வகைகளும், உணவு முறைகளும், உடற்பயிற்சிகளும், பொருட்களும் வந்துவிட்டன. ஆனால், இன்னும் நம்மில் பலர் தெளிவாக உடல் எடையை குறைக்க வேண்டிய அவசியம் இருக்கிறதா என்பதனை உணர்வதில்லை. ‘எல்லோரும் செய்வதால் நானும் செய்கிறேன்’ என உடலுக்கான தேவை இல்லை என்றாலும் ‘Weight loss’ எனும் வார்த்தைக்காக எடை குறைப்பு முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள்.
அப்படி சிலர் ஏன் குறைக்கக் கூடாது? அவ்வாறு குறைத்தால் என்ன ஆகும்? என்பது போன்ற விழிப்புணர்வு நமக்கு இன்றும் இருப்பதில்லை. இதனை போக்கவே இந்தக் கட்டுரை.
உடல் பருமன்…
இதய அடைப்பு, பக்கவாதம், சர்க்கரை நோய், கொழுப்பு படிந்த கல்லீரல் என பல தொற்றாத நோய்களுக்கு பிள்ளையார் சுழியாக இருப்பது உடல்பருமன்தான். தற்போதுள்ள டெக் உலகில் நாம் எந்த ஒரு விஷயத்திற்காகவும் உடல் உழைப்பை ஏற்படுத்திக் கொள்வதில்லை. அதேபோல நம் பொருளாதாரம் மேம்பட்டு இருப்பதால் தேவையில்லாமல் அளவுக்கு அதிகமான உணவுகளை உண்கிறோம். இவை இரண்டும்தான் உடற்பருமன் வருவதற்கு முக்கியக் காரணம்.நாம் அதிக உடல் எடையில் இருக்கிறோமா என்பதனை பி.எம்.ஐ. கணக்கில் தெரிந்துகொள்ளலாம். இதன் மூலம் நமது உடல் எடையை குறைக்க வேண்டுமா என தெரிந்து கொள்ளலாம்.
பி.எம்.ஐ:
19-க்கும் கீழ் : குறைவான உடல் எடை.
19-25 வரை: சரியான உடல் எடை.
25-30 வரை: உடற் பருமன்.
30-க்கும் மேல்: அதீத உடற்பருமன்.
இவ்வாறு நம் உடல் எடையை நமது உயரத்திற்கு ஏற்றவாறு பிரித்து வைத்துள்ளனர்.மேலும் வேறு சில அளவுகள் நாம் உடல் எடையை குறைக்கலாமா என நிர்ணயம் செய்கின்றது. உதாரணமாக, ரத்த சர்க்கரை அளவு, ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவு, HbA1C அளவு. இவை அனைத்தும் சரியான எண்ணில் உள்ளவர்கள் உடல் எடையை குறைக்க வேண்டிய அவசியம் இல்லை.
மூடநம்பிக்கைகள்…
* உணவு வழியாக மட்டுமே உடல் எடையை குறைத்தால் போதும் என நினைப்பது.
* உடற்பயிற்சிக் கூடத்தில் பல மணி நேரம் உடற்பயிற்சிகள் செய்வதால் உடல் எடையை குறைக்க முடியும் என நினைப்பது.
* தனக்குத்தானே உடற்பயிற்சிகளையும், உணவு முறைகளையும் வகுத்துக் கொண்டு அதை பின்பற்றுவது.
* தினம் தினம் வரும் புதுவிதமான வியாபார விஷயங்களால் ஈர்க்கப்படுவது. உதாரணமாக, உடல் எடை குறைக்கும் பானங்கள்.
* ஆரோக்கியமாக உடல் எடை குறைப்பது சார்ந்த உண்மைகள் பற்றிய தெளிவு இல்லாமல் இருப்பது.
யாரெல்லாம் எடை குறைப்பு செய்யக்கூடாது..?
கர்ப்பிணியாக இருப்பவர்கள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், உடல் எடை குறைவாக இருப்பவர்கள், சரியான பி.எம்.ஐ. எண்ணில் இருப்பவர்கள், ரத்த சோகை உள்ள பெண்கள், மற்ற ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள பெண்கள்.
விளையும் விளைவுகள்…
உடல் எடை குறைக்கக் கூடாதவர்கள் எடை குறைக்கும் போது நிகழும் பாதிப்புகள்.
* கருவில் இருக்கும் குழந்தையை ‘ஒட்டுண்ணி’ என்றுதான் மருத்துவத்தில் அழைப்போம். ஏனென்றால் தாயிடமிருந்து ஊட்டச்சத்துக்களை தொடர்ந்து உறிந்து எடுத்துக்கொண்டு தான் குழந்தை உயிர் வாழும். எனவே அந்த நேரத்தில் நாம் எடை குறைப்பு செய்தால் குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படும்.
* தாய்ப்பால் புகட்டும் தாய் உடல் எடை குறைப்பு செய்தால் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு போதுமான ஊட்டச்சத்துக்கள் குறையும். குழந்தை போதுமான எடையில் இல்லாமல் இருக்கும்.
* அடிப்படை கொழுப்புச்சத்து இருந்தால் மட்டுமே நாம் ஆரோக்கியமாக இருக்க முடியும் என்பதால், முற்றிலும் உடலிலுள்ள கொழுப்பினை கரைக்க வேண்டும் என சரியான உடல் எடையில் இருப்பவர்கள் மேலும் இப்படி செய்வதால் ஹார்மோன் கோளாறு, குழந்தையின்மை, ஒழுங்கற்ற மாதவிடாய் போன்ற பல சிக்கல்கள் நேரலாம். சருமம் முதல் மூளை வரை நம் உடலில் உள்ள உறுப்புகளுக்கு கொழுப்புச் சத்து இன்றியமையாதது.
* ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால் நாம் அந்த நேரத்தில் உடல் எடை குறைப்பு செய்வதினால் தேவையான பலன்களை நம்மால் எட்ட முடியாது. மேலும், இதனால் பல பாதிப்புகள் நம் எலும்பு, தசை போன்ற உறுப்புகளில் நிகழ நேரலாம்.
இயன்முறை மருத்துவம்…
உடல் எடை குறைக்கத் தொடங்கும் முன் அருகிலுள்ள இயன்முறை மருத்துவரை அணுகி போதிய விழிப்புணர்வை பெற்றுக்கொள்வது அவசியம். நம் உடல் எடை, உடல் தசைகளின் திறன் என அனைத்தையும் பரிசோதனை செய்து, நாம் உடல் எடை குறைப்பு செய்ய வேண்டுமா என்பதனை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஒருவேளை உடல் எடை குறைக்கத் தேவையில்லை என்றால் வேறு என்ன உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்? ஏன் செய்ய வேண்டும் என்பதனையும் பரிந்துரைத்து கற்றும் தருவர். மேலும், பொது மருத்துவர், உணவியல் நிபுணர் ஆலோசனையும் பெற்றுக்கொள்வது அவசியமாகிறது.
மொத்தத்தில் எடை குறைப்பு விஷயத்தில் ஒவ்வொருவரும் போதிய விழிப்புணர்வோடு இருந்தாலே போதுமானது. பல தேவையற்ற விஷயங்களில் இருந்து தப்பித்து, உடல் ஆரோக்கியத்தை நன்முறையில் மேம்படுத்திக்கொள்ள முடியும். எனவே, வணிகமாக மாறிவரும் ஆரோக்கியத்தை விழிப்புணர்வுடன் எதிர்கொண்டு நம் உடலை மீட்டெடுப்போம்.
தொகுப்பு: கோமதி இசைக்கர் இயன்முறை மருத்துவர்
