×

சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை மீனாட்சியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்: விண்ணை பிளந்தது ‘நமச்சிவாய வாழ்க’ கோஷம் பக்தர்கள் வெள்ளத்தில் மூழ்கின மாசி வீதிகள்

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் முத்திரை நிகழ்வான தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடந்தது. இதில், லட்சக்கணக்கான பக்தர்களின் கோஷம் விண்ணை பிளந்தது. தேரோட்டம் நடைபெற்ற மாசி வீதிகள் பக்தர்கள் வெள்ளத்தில் மூழ்கின.

உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினசரி மீனாட்சியம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். விழாவின் முக்கிய நிகழ்வுகளான மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் கடந்த 26ம் தேதியும், திக்கு விஜயம் 27ம் தேதியும் நடைபெற்றது. சிகர நிகழ்ச்சியான மீனாட்சியம்மன்-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நேற்று நடந்தது.

மாசி வீதிகள் குலுங்க… குலுங்க…
இதனை தொடர்ந்து விழாவின் முத்திரை நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை வெகு விமரிசையாக நடந்தது. முன்னதாக விநாயகர், முருகப்பெருமான் தேர்கள் இழுக்கப்பட்டன. தொடர்ந்து அதிகாலை 5.29 மணியளவில் பிரியாவிடையுடன், சுந்தரேஸ்வரர் பெரிய தேரிலும், மீனாட்சியம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளினர். காலை 6.25 மணியளவில் பெரிய தேரையும், 6.30 மணியளவில் சிறிய தேரையும் கோயில் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பிரமுகர்கள் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

இதை தொடர்ந்து கூடியிருந்த பக்தர்கள், நமச்சிவாய வாழ்க… நாதன்தாள் வாழ்க… என பக்தி கோஷம் விண்ணை பிளக்க வடம் பிடித்து தேர்களை இழுத்தனர். 4 மாசி வீதிகளிலும் சுவாமி-அம்மன் தேர்கள் ஆடி, அசைந்து வலம் வந்தது. தேருக்கு முன் அலங்கரிக்கப்பட்ட கோயில் யானை மற்றும் காளை வலம் வந்தது. 5 கி.மீ சுற்றளவுள்ள 4 மாசி வீதிகளிலும் தேர்கள் வலம் வந்தன. பகல் 12.30 மணியளவில் தேர்கள் நிலைக்கு வந்தன. பல லட்சம் பக்தர்கள் தேரோட்டத்தை பார்வையிட்டு சுவாமி, அம்மனை தரிசனம் செய்தனர். மதுரை மாவட்டம் மட்டுமல்லாமல் வெளிமாவட்டங்களை சேர்ந்த பக்தர்களும் அதிகளவில் வந்திருந்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமிகள் வரும் வரை நடை சாத்தப்பட்டு இருந்தது.

தேரோட்டத்திற்கு வந்த பக்தர்களுக்கு பல்வேறு நிறுவனங்கள் சார்பில் நீர்மோர், புளியோதரை, பொங்கல், தக்காளி சாதம், வெஜிடபிள் பிரியாணி உள்ளிட்ட பல்வேறு உணவு வகைகள் வழங்கப்பட்டன. வெயிலை சமாளிக்க விசிறிகளை வழங்கினர்.

பலத்த பாதுகாப்பு
மாசி வீதிகள் முழுவதும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். 35க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 200க்கும் மேற்பட்ட இடங்களில் சிசிடிவிகள் பொருத்தப்பட்டிருந்தன.

சித்திரைக்கு மாறிய தேரோட்டம்
பழங்காலத்தில் மீனாட்சியம்மன் கோயில் தேரோட்டம் மாசி மாதமே நடந்தது. ‘மண் சுமந்த சொக்கருக்கு மாசித் தேரோடுது’ என்பதே நாட்டுப்புறப்பாடல். இதனால் தான் மதுரையில் தேரோடிய வீதிகள், மாசி வீதிகள் என பெயர் பெற்றன. அறுவடை காலமான மாசியில் தேர் இழுக்க ஆட்கள் வருவதில் சிரமம் இருந்தது. சைவ, வைணவ சமயங்களுக்கு இடையேயான ஒற்றுமைக்காக சித்திரையில் வைகையாற்றில் அழகர் இறங்கும்போது, மீனாட்சியம்மன் கோயில் விழாவையும் இணைத்து சித்திரை பெருவிழாவாக மாற்றியமைத்தனர்.

வாராரு… வாராரு… அழகர் வாராரு…
மதுரை அருகே அழகர்கோயிலில் உள்ள கள்ளழகர் கோயிலில் சித்திரை திருவிழா நேற்று முன்தினம் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக கள்ளழகர் இன்று மாலை 6.15 மணிக்கு கண்டாங்கி பட்டு உடுத்தி, நேர்க்கம்பு ஏந்தி, சகல பரிவாரங்களுடன் தங்கப்பல்லக்கில் எழுந்தருளி மதுரை புறப்பட்டு வருகிறார். நாளை காலை 6.30 மணிக்கு மூன்றுமாவடியில், அழகரை மதுரை மக்கள் எதிர்கொண்டு வரவேற்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 8.30 மணிக்கு மதுரை தல்லாகுளத்தில் அமைந்துள்ள பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலை அழகர் சென்றடைகிறார்.

பின்னர் திருமஞ்னம் முடிந்து தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி, திருவில்லிபுத்துார் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை சாற்றிக்கொண்டு இரவு 11.30 மணிக்கு மதுரை வைகை ஆற்றில் இறங்க புறப்படுகிறார். நாளை மறுதினம் அதிகாலை 3 மணிக்கு தல்லாகுளம் கருப்பண சுவாமி கோயில் அருகே உள்ள ஆயிரம் பொன்சப்பரத்தில் எழுந்தருளல் நிகழ்வு நடைபெறும். பின்னர் அதிகாலை 5.35 மணிக்கு மேல் 5.55 மணிக்குள் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்குகிறார். கள்ளழகர் மதுரைக்கு கிளம்பும் நிலையில் அழகர்கோயிலில் பாதுகாப்பு பணியில் மதுரை மாவட்ட எஸ்பி அரவிந்த் தலைமையில், 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Madurai ,Meenakshi Amman ,Temple ,Therottam ,Chithirai festival ,Madurai: ,Madurai Meenakshi Amman Temple ,Madurai… ,
× RELATED உதகை அருகே தாய் விட்டு சென்ற இரண்டு...