×

அதிகரித்து வரும் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி சம்பவங்கள்: 12 வாரங்களில் 9,400-க்கும் மேற்பட்ட அக்கவுண்ட்ஸ்களை முடக்கிய வாட்ஸ்அப்

டெல்லி; டிஜிட்டல் மோசடி வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் வாட்ஸ்அப் ஒரு பெரிய நடவடிக்கையை எடுத்துள்ளது. சமீபத்தில் சுமார், 9,400-க்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் அக்கவுண்ட்டுகளை நிறுவனம் முடக்கி உள்ளது. குறிப்பாக ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ எனப்படும் வேகமாகப் பரவி வரும் மோசடியைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இது தொடர்பான அறிவிப்பில் வாட்ஸ்அப் கூறி இருக்கிறது. டிஜிட்டல் அரெஸ்ட் என்பது மோசடிக்காரர்கள், காவல்துறை அல்லது அரசு அதிகாரிகள் போல் நடித்து மக்களை பீதிக்குள்ளாக்குகிறார்கள். பணமோசடி அல்லது போதைப்பொருள் குற்றச்சாட்டுகள் போன்ற ஒரு கடுமையான குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறி, அவர்கள் கால் செய்து மிரட்டுவார்கள் அல்லது மெசேஜ்களை அனுப்புவார்கள். இப்படி அச்சுறுத்தி பணம் பறிக்க பார்ப்பார்கள்.

போலியான எஃப்ஐஆர் (FIR), கைது வாரண்டுகளைக் காட்டி பயமுறுத்துவர். மோசடி நபர்கள் பாதிக்கப்பட்டவரை 24/7 வாட்ஸ்அப் அல்லது வீடியோ காலில் இருக்கச் சொல்லி, குடும்பத்தாரோடு பேச விடாமல் தனிமைப்படுத்துவர். “பிணைத் தொகை” அல்லது “சரிபார்ப்பு” என்ற பெயரில் பணத்தை அரசு அதிகாரப்பூர்வ கணக்கு எனக்கூறி மோசடி கணக்குகளுக்கு மாற்ற வைப்பர். ஆனால் இந்தியாவை பொறுத்த வரை ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ என்ற முறை கிடையாது. எந்த காவல்துறை அதிகாரியும் வீடியோ அழைப்பில் கைது செய்ய முடியாது. இது தெரியாமல் பலரும் மோசடி நபர்களின் சாதி வலையில் விழுந்து விடுகிறர்கள்.

இதனிடையே அறிக்கைகளின்படி, 9,400-க்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் அக்கவுண்ட்டுகளை முடக்கிய நடவடிக்கை 2026 ஜனவரி மாதம் தொடங்கி, சுமார் 12 வார காலத்திற்கு மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டுளது. இந்திய யூஸர்களை குறிவைத்து நிகழ்த்தப்பட்டு வந்த டிஜிட்டல் அரெஸ்ட்டில் ஈடுபட்ட ஏராளமான வாட்ஸ்அப் அக்கவுண்ட்டுகள் தென்கிழக்கு ஆசியாவிலிருந்து, குறிப்பாக கம்போடியாவிலிருந்து இயக்கப்படுவதாகத் தனது விசாரணையில் கண்டறியப்பட்டதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.

துவக்கத்தில் அரசு அமைப்புகள் சுமார் 3,800 சந்தேகத்திற்கிடமான வாட்ஸ்அப் அக்கவுண்ட்டுகளை அடையாளம் கண்டன. எனினும் வாட்ஸ்அப்பின் சொந்த அமைப்புகள் இந்த விசாரணையை மேலும் விரிவுபடுத்தி, ஒரு பெரிய மோசடி நெட்வொர்க்கை கண்டறிந்து, ஆயிரக்கணக்கான கூடுதல் அக்கவுண்ட்டுகளை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. இதனிடையே வாட்ஸ்அப் மேலும் வலுவான செக்யூரிட்டி டூல்ஸ்களை அறிமுகப்படுத்துவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. யூஸர்களின் சுயவிவரப் படங்களில் காவல்துறை அல்லது அரசு சின்னங்களைப் பயன்படுத்தும் அக்கவுண்ட்கள கண்டறிந்து மோசடியாக இருந்தால் அதனை அகற்றும் முறைகளும் இதில் அடங்கும்.

அதே போல் புதிதாக உருவாக்கப்பட்ட அக்கவுண்ட்களிலிருந்து யூஸர்களுக்கு கால்ஸ் வரும்போது எச்சரிக்கைகளை வழங்கவும் வாட்ஸ்அப் திட்டமிட்டுள்ளது. டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி புகார்கள் அதிகரித்து வரும் நேரத்தில், தனிப்பட்ட புகார்களின் அடிப்படையில் மட்டும் செயல்படாமல் மாறாக முழு மோசடி நெட்வொர்க்குகளையும் கண்டறிந்து தகர்க்க முயற்சிப்பதாகவும் வாட்ஸ்அப் கூறி உள்ளது.

Tags : WhatsApp ,Delhi ,India ,
× RELATED திருச்சானூரில் நாளை பத்மாவதி தாயார் கோயிலில் வசந்தோற்சவம் தொடங்குகிறது