×

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும்: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தல்

சென்னை: ‘தமிழக விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இன்று நடைபெறவிருக்கும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஒத்திவைப்பதோடு, தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அரசுகள் அமைந்த பின்னரே இக்கூட்டம் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்’ என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது; “தமிழக விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் – தமிழ்நாடு, கேரளம் மற்றும் புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமைந்த பின்னரே கூட்டம் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.

டெல்லியில் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் காவிரி மேலாண்மை ஆணையக்கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்ற தமிழக விவசாயிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு ஏற்கனவே திட்டமிட்டபடி கூட்டம் நடைபெற இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

காவிரி நதிநீரில் தொடர்புடைய நான்கு மாநிலங்களில் கர்நாடகாவை தவிர்த்து மீதமுள்ள தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி ஆகிய மூன்று மாநிலங்களில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகாத நிலையில், அதிகாரிகளை வைத்து காவிரி மேலாண்மை ஆணையத்தை கூட்டுவதும், அதில் நதிநீர் விவகாரம் குறித்து விவாதிப்பதும் ஏற்புடையதல்ல.

அதிலும், குறிப்பாக தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதிகளை பாலைவனமாக்கும் வகையில் காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டியேத் தீருவோம் என கர்நாடக அரசு பிடிவாதம் பிடித்துக் கொண்டிருக்கும் நிலையில், இன்று நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் அம்மாநிலத்திற்கு சாதகமான சூழலை ஏற்படுத்தக் கூடும் என்ற அச்சம் தமிழக விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.

எனவே, தமிழக விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இன்று நடைபெறவிருக்கும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஒத்திவைப்பதோடு, தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அரசுகள் அமைந்த பின்னரே இக்கூட்டம் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையத்தை வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

Tags : Cauvery Management Commission ,AMMK ,general secretary ,TTV Dhinakaran ,Chennai ,Tamil Nadu ,Cauvery ,Management ,Commission ,Kerala ,Puducherry ,
× RELATED லாலாப்பேட்டை அருகே குடிநீர் வழங்க...