×

விசைப்படகுகளுக்கு 2 மாத தடை நாட்டுப்படகுகளில் சென்று மீனவர்கள் தீவிர மீன்பிடிப்பு

ராமேஸ்வரம் : தமிழக கடலில் விசைப்படகுகளுக்கு தடைக்காலம் என்பதால், ராமேஸ்வரம் தீவில் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிப்பில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

தமிழக கடலில் விசைப்படகுகளுக்கு மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ள நிலையில், ராமேஸ்வரம் தீவு முழுவதும் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிப்பில் தீவிரம் காட்டியுள்ளனர்.

ராமேஸ்வரத்தில் தனுஷ்கோடி, எம்.ஆர்.சத்திரம், சேராங்கோட்டை, சங்குமால், ஓலைக்குடா, தங்கச்சிமடத்தில் வில்லூண்டி தீர்த்தம், சூசையப்பட்டினம், பாம்பனில் வடக்கு கடற்கரை, முந்தல்முனை, சின்னப்பாலம், முகமதிலியார்புரம், தோப்புக்காடு, குந்துகால் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 1,500க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். மீனவர்கள் அந்தந்த பகுதி கடற்கரையில் இருந்து மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர்.

பாம்பன் மன்னார் வளைகுடா கடலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான நாட்டுப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்று தினமும் அதிகாலையில் கரை திரும்புகின்றனர். மீன்வர்கள் பிடித்து வரும் மீன்களை வலையில் இருந்து பிரித்து வடக்கு கடற்கரையில் ஏலம் விற்பனை இடத்தில் அதிகாலை 5 மணி முதல் ஏலத்தில் மீன்களை விற்பனை செய்கின்றனர்.

மீனவர்கள் வலையில் சீலா, மாவுலா, விலை மீன், நகரை, முரல், பண்ணா, கெலைக்கான் உள்ளிட்ட மீன்கள் சிக்குகின்றன. இதில் குறிப்பாக சூடை, சாளை, கத்தாளை உள்ளிட்ட மீன்கள் அதிகளவில் பிடித்து வரப்படுகிறது. பெரிய வல்லங்களில் தங்கி மீன்பிடித்து வரும் மீனவர்களும், தூண்டில் மீன்பிடிக்கும் மீனவர்களும் இங்கு மீன்களை விற்பனை செய்கின்றனர்.

தடை காலத்தில் மீன்களுக்கு அதிக தட்டுப்பாடு உள்ளதால் உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் மீன்களை ஏலத்தில் போட்டி போட்டு வாங்கிச் செல்கின்றனர். மேலும் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன் மற்றும் மண்டபம் பகுதியில் இருந்து உள்ளூர் மீன் பிரியர்கள் வீட்டு தேவைக்கு மீன்களை வாங்க இங்கு குவிக்கின்றனர். இதனால் பாம்பன் வடக்கு கடற்கரை தினமும் காலையில் மீனவர்கள் வியாபாரிகள் நிறைந்து பரபரப்புடன் மிகவும் பிஸியாக காணப்படுகிறது.

Tags : Rameswaram ,Tamil Nadu ,Rameswaram island ,Rameswaram island… ,
× RELATED லாலாப்பேட்டை அருகே குடிநீர் வழங்க...