×

கூடலூரில் நள்ளிரவில் பரபரப்பு வீட்டை உடைத்து சூறையாடிய காட்டு யானை

*வெளியில் ஓடி உயிர் தப்பிய குடும்பத்தினர்

*அரிசியை தின்று பொருட்களை வெளியே இழுத்து வீசியது

கூடலூர் : கூடலூர் அருகே வீட்டை உடைத்து காட்டு யானை சூறையாடியது. யானை தாக்குதலால் வீட்டை விட்டு வெளியில் ஓடி குடும்பத்தினர் உயிர் தப்பினர்.

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட சேரன் நகர் பகுதியை சேர்ந்தவர் செல்லையா (65). தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு வீட்டில் செல்லையா, அவரது மனைவி ராஜேஸ்வரி, மகள் கவிதா, கவிதாவின் கணவர், அவர்களது 2 குழந்தைகள் மற்றும் 2 உறவுமுறை பெண்கள், ஒரு சிறுவன் என 9 பேர் இருந்தனர்.

நள்ளிரவு சுமார் 11 மணியளவில் அவர்கள் அனைவரும் உறங்கிக்கொண்டிருந்தனர். அப்போது, வனத்தில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று அந்த பகுதிக்கு வந்தது. செல்லையாவின் வீட்டு அருகே வந்த காட்டு யானை அட்டகாசத்தில் ஈடுபட்டது.

செல்லையாவின் வீட்டை உடைத்து சூறையாடியது. வீட்டின் பின்புறம் கதவு மற்றும் ஓடுகள் உடைபடும் சத்தம் கேட்டதால் செல்லையா எழுந்து வெளியில் சென்று பார்த்தார்.

அப்போது, காட்டு யானை வீட்டை உடைத்து கொண்டிருப்பதை அறிந்தார். தொடர்ந்து அவர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தவர்களை எழுப்பி, அவர்களை அழைத்துக் கொண்டு வீட்டின் முன்புற வாசல் வழியாக வெளியேறி அருகில் உள்ள வீட்டில் தஞ்சம் அடைந்தார்.

இதையடுத்து அக்கம், பக்கத்தவர்கள் சத்தம் போட்டும் யானை அங்கிருந்து செல்லவில்லை. வீட்டை பெருமளவில் சேதப்படுத்தியது. அங்கிருந்து அரிசி உள்ளிட்ட தானியங்களை சாப்பிட்டதோடு பொருட்களை வெளியே இழுத்து வீசியது. தகவல் அறிந்து வனத்துறையினர் அங்கு வந்தனர். அவர்கள் யானையை விரட்டும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆரூற்றுப்பாறை பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் இறந்த நிலையில், மீண்டும் யானை வீட்டை உடைத்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.போதிய உணவு, தண்ணீர் கிடைக்காமல் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் ஆக்ரோஷமாக காணப்படுவதாகவும், வனப்பகுதியை ஒட்டி வசிக்கும் பொதுமக்கள் மற்றும் காலை நேரங்களில் வேலைக்கு செல்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்றும் வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

யானை தாக்கி தம்பதி காயம்

அல்லூர் வயல் பகுதியில் இருந்து பழங்குடியின தொழிலாளர் சாதி (65), அவரது மனைவி சிந்தாமணி (55) ஆகியோர் அருகிலுள்ள தனியார் தேயிலை தோட்டத்திற்கு வேலைக்கு நேற்று முன்தினம் காலை சென்றனர். அப்போது அங்கு மறைந்திருந்த காட்டு யானை இருவரையும் விரட்டியது. இருவரும் தப்பி ஓடியபோது கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர்.

இவர்கள் சத்தம் கேட்டு அருகில் இருந்த மற்ற தொழிலாளர்கள் ஓடி வந்து யானையை சத்தம் போட்டு விரட்டிவிட்டு இருவரையும் மீட்டு கூடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். சம்பவ பகுதியில் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

Tags : Koodalur ,KUDALUR ,Neelgiri ,
× RELATED லாலாப்பேட்டை அருகே குடிநீர் வழங்க...