துபாய்: அமெரிக்கா தனது முற்றுகையை கைவிட்டு, போரை முடிவுக்கு கொண்டு வந்தால், அதற்கு ஈடாக ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க தயாராக இருப்பதாக ஈரான் புதிய பரிந்துரையை அனுப்பி உள்ளது. ஆனால் டிரம்ப் இதை ஏற்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் தொலைக்காட்சி ஒன்றுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ அளித்த பேட்டியில்,‘‘ஈரானுடன் எந்த ஒரு ஒப்பந்தம் அல்லது உடன்படிக்கை எட்டப்பட்டாலும் அது எந்த கட்டத்திலும் அவர்கள் அணு ஆயுதத்தை நோக்கி அதிவேகமாக முன்னேற்றுவதை திட்டவட்டமாக தடுப்பதாக இருப்பதை நாம் உறுதி செய்யவேண்டும்” என்றார்.
ஈரானின் இந்த சலுகை குறித்து அதிபர் டிரம்ப்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழு விவாதித்ததாகவும் இது குறித்து அதிபர் டிரம்ப் பின்னர் கருத்து தெரிவிப்பார் என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொண்டு இருந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த சலுகை முன்வைக்கப்பட்டது. ரஷ்யாவிடம் இருந்து ஈரானுக்கு எத்தகைய உதவி கிடைக்கும் என்பது தெரியவில்லை.
