கோவையில் கடும் வெயில் காரணமாக விவசாய பயிர்கள் கடும் பாதிப்பு – விவசாயிகள் வேதனை

கோவை: மாநிலம் முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்த நிலையில் கோவையில் கடும் வெயில் காரணமாக வாழை, தென்னை, தக்காளி, அவரை உள்ளிட்ட விவசாய பயிர்கள் பாதிப்படைந்து உள்ளன.

கோவை மாவட்டத்தை பொறுத்த வரை தொழில்துறைக்கு நிகராக விவசாயமும் பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரமாக இருக்கிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் பெரும்பாலும் விவசாயம் மட்டுமே செய்யப்பட கூடிய சூழல் இருக்கிறது. இந்த பகுதியில் காலம் காலமாக விவசாயத்தை நம்பி பல விவசாயிகள் வாழ்ந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நடப்பாண்டு ஒருகடுமையான கோடை வெப்பம் மாநிலம் முழுவதையும் வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இந்த வருடம் தோட்ட பயிர்கள் கருகும் அளவிற்கு விளைச்சல் குறைந்து போயுள்ளதாக விவசாயிகள் கவலையுடன் உள்ளனர். எவ்வளவு தான் நீர் பாய்ச்சினாலும் கூட, நிலவும் கடும் வெப்பம் காரணமாக அது போதுமானதாக இல்லை. இதனால் ஒருபக்கம் செலவு அதிகரித்துள்ளது.

குறிப்பாக கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியையொட்டி அமைந்துள்ள தீத்திபாளையத்தில், பல்வேறு விவசாய பயிர்கள் விவசாயிகளால் பயிரிடப்பட்டு உள்ளது. ஆனால் கடும் கோடை காரணமாக இந்த விவசாய பயிர்களால் முழுவதுமாக அவர்களுக்கு பலன் கிடைக்காத சூழலே நிலவுகிறது. தக்காளி, அவரை உள்ளிட்ட விவசாய பயிர்கள் பாதிப்படைந்திருக்கின்றன. வெயிலின் உக்கிரம் காரணமாக மகசூல் குறைவதோடு, பயிர்கள் அழியும் நிலையில் ஏற்பட்டிருப்பதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

குறிப்பாக தென்னை, வாழை பயிர்களும் பாதிக்கப்பட்டிருக்கிறது. வெயிலின் தாக்கத்தால் பல வாழைமரங்கள் கருகி போயியுள்ளன. தென்னையில் குருத்திலேயே குரும்பை கீழே விழும் நிலையும், காலிஃப்ளவர் விவசாயத்தில் வழக்கத்திற்கு மாறாக 6 மடங்கு செலவும் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்து உள்ளனர்.

Related Stories: