கல்லூரி சேர்க்கையில் வெயிட்டேஜ் மதிப்பெண்: தனியார் கல்லூரிகள் திட்டம்

சென்னை: சென்னையில் இயங்கும் தனியார் கல்லூரிகளில் இந்த ஆண்டு கணினி அறிவியல் மற்றும் விஷூவல் கம்யூனிகேஷன் பாடங்களில் சேர்க்கை பெற விரும்பும் மாணவ மாணவியர்‘கிட்ஹப்’ மற்றும் ‘பிஹேன்ஸ்’ தளங்களில் போர்ட்போலியோ உருவாக்கி இருந்தால் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கவும், சேர்க்கையின்போது நேர்காணல் நடத்தி வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்கவும் தனியார் கல்லூரி நிர்வாகங்கள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

சிபிஎஸ்இன் 12ம் வகுப்பு மற்றும் மாநில பாடத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் நடத்தப்படும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியாக உள்ள நிலையில், தனியார் கல்லூரிகள் பல அடுத்த வாரமே ஆன்லைன் மூலம் சேர்க்கை பதிவுகளை தொடங்க திட்டமிட்டுள்ளன. இதையடுத்து, 2026-2027ம் கல்வி ஆண்டுக்கான சேர்க்கையில் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்க மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி முன்னுரிமை அளிக்கவும் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக படைப்பாற்றல் தொகுப்புகளுக்கு(போர்ட்போலியோ) முக்கியத்துவம் அளிக்கப்படவும் உள்ளது.

கலைப் பாடங்கள் படித்த மாணவ மாணவியர் மேற்கண்ட வாரியத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருக்க வாய்ப்பில்லை என்பதால், அந்த வகை மாணவர்கள் படைப்புத் தொகுப்புகளை கொண்டிருக்க வாய்ப்பு உண்டு. எனவே இந்த ஆண்டு முதல் படைப்புத் தொகுப்புகளுக்கு கட்ஆப் மதிப்பெண்களுக்கும் அதிகமாகவும் 10 சதவீதம் கூடுதலாக முக்கியத்துவம் வழங்கவும் அந்த கல்லூரி திட்டமிட்டுள்ளது. அதேபோல குறியீடுகள் வடிவமைப்பதில் ஆர்வம் கொண்ட மாணவர்கள், சிறந்தபணித் தொகுப்பு கொண்டவர்களுக்கு பிசிஏ, பிஎஸ்சி கணினி அறிவியல் படிப்புகளில் முன்னுரிமை அளிக்கவும் திட்டமிட்டுள்ளது.

சென்னை மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியில் வணிவியல், கணினி அறிவியல் மற்றும் பெரு நிறுவனப் பொருளாதாரம், போன்ற முதுகலைப்படிப்புகள் மற்றும் இளைநிலைப் படிப்புகளுக்கு நேர் காணல் நடத்தவும் திட்டமிட்டுள்ளது.  இந்நிலையில், கணினி அறிவியல்(செயற்கை நுண்ணறிவு) டேட்டா சயின்ஸ் மற்றும் தகவல் தொழில் நுட்பம் போன்ற வளர்ந்து வரும் படிப்புகளின் நோக்கம் மற்றும் வேறுபாடுகள் குறித்து மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் தெரியவில்லை.

எனவே, இந்த கல்லூரிகளின் பேராசிரியர்கள், இது குறித்து மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரிடம் கலந்துரையாடி, இந்த படிப்பில் மாணவர்கள் என்ன படிப்பார்கள் மற்றும் அந்த படிப்புகளின் வேலை வாய்ப்புகள் குறித்து அவர்களுக்கு புரியும்படி விளக்கவும் முன்வந்துள்ளனர் என்று அந்த கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில், இந்த ஆண்டுக்கான சேர்க்கை தொடர்பாக, மே முதல் வாரத்தில் இணைய வழிப்பதிவுகளை தொடங்கவும் திட்டமிட்டுள்ளனர்.

மாணவியர் மற்றும் பெற்றோரின் சந்தேகங்களை தெளிவுபடுத்த ஒரு chatbot-ஐ அறிமுகம் செய்யவும் திட்டமிட்டுள்ளனர். மேலும் சில படிப்புகளுக்கான தொழில் வாய்ப்புகள் குறித்து மாணவர்களிடம் நேர்க்காணல்களையும் நடத்தி வருவதாக அந்த கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அடுத்தபடியாக, எத்திராஜ் மகளிர் கல்லூரியில் மே மாதம் 2ம் தேதி முதல் இணைய வழிப் பதிவுகளை தொடங்க திட்டமிட்டுள்ளனர். எம்சிசி மற்றும் டிஜி வைஷ்ணவ் கல்லூரி போன்ற கல்லூரிகள் ஏற்கெனவே இணைய வழிப் பதிவுகளை தொடங்கிவிட்டன. 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு இந்த கல்லூரிகள் முறையாக சேர்க்கை நடவடிக்கைகளை தொடங்க உள்ளன.

Related Stories: