- ஒசாகா
- மாட்ரிட் ஓபன்
- அசால்டா
- மாட்ரிட்
- மாட்ரிட் ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர்
- கோகோ கோஃப்
- நவோமி ஒசாகா
- மாட்ரிட் ஓபன் டென்னிஸ்
- ஸ்பெயின்
மாட்ரிட்: மாட்ரிட் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் 3வது சுற்றுப் போட்டியில் நேற்று, அமெரிக்க வீராங்கனை கோகோ காஃப், ஜப்பான் வீராங்கனை நவோமி ஒஸாகா அபார வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினர். மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டிகள், ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் நடந்து வருகின்றன. மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 3வது சுற்றுப் போட்டி ஒன்றில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒஸாகா, உக்ரைன் வீராங்கனை அன்ஹெலினா கலினினா மோதினர்.
இப்போட்டியின் துவக்கம் முதல் துள்ளலுடன் ஆடிய நவோமி ஒஸாகா, முதல் செட்டை 6-1 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வசப்படுத்தினார். தொடர்ந்து நடந்த 2வது செட்டில் சிறப்பாக ஆடிய அவர், 6-3 என்ற புள்ளிக்கணக்கில் வென்றார். அதனால், 2-0 என்ற நேர் செட்களில் வெற்றி வாகை சூடிய ஒஸாகா, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில், அர்ஜென்டினா வீராங்கனை ஸொலானா சியரா, துருக்கியின் ஸெய்னெப் ஸொன்மெஸ் உடன் மோதினார்.
முதல் செட்டில் சிறப்பாக ஆடிய ஸெய்னெப், ஒரு புள்ளி கூட விட்டுத்தராமல், 6-0 என்ற புள்ளிக் கணக்கில் வென்றார். இருப்பினும் அடுத்த இரு செட்களில் அசத்தலாக ஆடிய சியரா, 6-2, 6-3 என்ற புள்ளிக் கணக்கில் அந்த செட்களை வசப்படுத்தினார். அதனால், 2-1 என்ற கணக்கில் சியரா வென்றார். இன்னொரு போட்டியில் அமெரிக்க வீராங்கனை கோகோ காஃப், ரொமானியா வீராங்கனை சொரானா கிறிஸ்டி மோதினர்.
இப்போட்டியின் முதல் செட்டை, சிறப்பாக ஆடிய கிறிஸ்டி, 6-4 என்ற புள்ளிக் கணக்கில் வசப்படுத்தினார். 2வது செட்டை, 7-5 என்ற புள்ளிக்கணக்கில் காஃப் கைப்பற்றினார். அதைத் தொடர்ந்து வெற்றியை தீர்மானிக்கும் 3வது செட்டை, 6-1 என்ற புள்ளிக் கணக்கில் காஃப் வசப்படுத்தினார். அதனால் 2-1 என்ற கணக்கில் வென்ற காஃப் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார்.
