×

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் தவறான நேரம் காட்டியதால் பரபரப்பு: ஸ்ட்ராங்க் ரூமில் திருப்பூர் கலெக்டர் மனிஷ் ஆய்வு

திருப்பூர்: வாக்கு எண்ணிக்கை மையத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் தவறான நேரத்தை காட்டியதால் சர்ச்சை எழுந்துள்ளது. இதனை கலெக்டர் மனிஷ் ஆய்வு செய்தார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மாவட்டத்தில் 88.52 சதவீத வாக்குகள் பதிவானது. மாவட்டத்தில் 2,822 வாக்குச்சாவடியில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் ஓட்டுப்பதிவு முடிந்த பின்னர் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. பின்னர் பாதுகாப்பாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையமான திருப்பூர் எல்ஆர்ஜி அரசினர் மகளிர் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டன.

கல்லூரி வளாகத்தில் உள்ள ஸ்ட்ராங் ரூமில் அந்தந்த தொகுதிகளுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் இயந்திரங்கள் வைக்கப்பட்டன. கல்லூரியில் 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனை முகவர்கள் கண்காணித்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று காலை 7 மணிக்கு பதிலாக காலை 5 மணி என தவறுதலாக நேரத்தை சிசிடிவி கேமராக்கள் காட்டின. தேர்தல் பாதுகாப்பு பணிக்காக அனுமதியுடன் இருக்கக்கூடிய அரசியல் கட்சியினர் இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டுள்ளனர்.

திருப்பூர் தெற்கு தொகுதிக்கு மட்டுமல்ல, மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான இயந்திரங்கள் உள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவிலும் இதேபோன்று தவறுதலான நேரத்தையே காட்டியதால் ஏதோ குளறுபடி இருப்பதாக அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டினர். இதையடுத்து வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான மனிஷ் மற்றும் வருவாய் அதிகாரி கார்த்திகேயன் ஆகியோர் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கண்காணிப்பு கேமராவில் நேரம் குறிப்பிடும் சர்வரில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக நேரம் தாமதமாக காட்டியது தெரியவந்தது. அது அதிகாரிகள் முன்னிலையில் சரி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து ேகமராக்கள் சரியான நேரத்தை காண்பித்தது. இதன் காரணமாக வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Tiruppur ,Collector ,Manish ,Tiruppur district ,
× RELATED விளைச்சல் இருந்தும் விற்பனைக்கு...