×

சட்டமன்ற தேர்தலில் திமுகவின் வெற்றி வாய்ப்பு சூப்பர்: தம்ஸ் அப் காட்டி முதல்வர் உற்சாகம்; கொடைக்கானலில் மக்கள் வரவேற்பு

மதுரை: சட்டமன்ற தேர்தலில் திமுகவின் வெற்றி வாய்ப்பு சூப்பராக உள்ளதாக முதல்வர் தம்ஸ் அப் காட்டி கூறியுள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான பொதுத்தேர்தலை முன்னிட்டு, திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழ்நாடு முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். இடைவிடாது இரவு, பகல் பார்க்காமல் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
தமிழ்நாடு முழுவதும் கடுமையான சூறாவளி பிரசாரம் மேற்கொண்ட நிலையில், கடந்த 23ம் தேதி தமிழ்நாடு முழுவதும் வாக்குப்பதிவு எந்தவித பிரச்னையுமின்றி அமைதியாக நடந்து முடிந்தது.

பதிவான வாக்குகள் அனைத்தும் வரும் மே 4ம் தேதி எண்ணப்படுகிறது. இதற்கிடையில் நேற்று முன்தினம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட 4 மாவட்ட திமுக வேட்பாளர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசினர். அப்போது வெற்றி வாய்ப்புகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். இந்நிலையில், தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக அதிகரித்து வருகிறது. இதனால், சூறாவளி பயணம் மேற்கொண்ட முதல்வர், திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தனது குடும்பத்தினருடன் 4 நாட்கள் ஓய்வு எடுக்கிறார். இதற்காக நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினர் வந்திருந்தனர்.

மதுரை விமான நிலையத்தில் அவரை சபாநாயகர் அப்பாவு மற்றும் திமுக தொண்டர்கள் வரவேற்றனர். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் செய்தியாளர்கள், ‘‘இந்த தேர்தலில் திமுகவின் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது’’ என்று கேட்டனர். அதற்கு முதல்வர், திமுகவின் வெற்றி வாய்ப்பு சூப்பராக உள்ளது என்பதை கூறிடும் வகையில், கை கட்டை விரலை உயர்த்தி, தம்ஸ் அப் காட்டியவாறு, அங்கிருந்து காரில் கிளம்பி கொடைக்கானல் சென்றார். மதியம் 3 மணிக்கு கொடைக்கானல் வந்தடைந்த முதல்வர் மற்றும் குடும்பத்தினரை, திமுகவினர் மற்றும் பொதுமக்கள் பூச்செண்டு, புத்தகங்கள் வழங்கியும், பொன்னாடை போர்த்தியும் வரவேற்றனர். பின்னர் அவர் தனியார் விடுதிக்கு கிளம்பிச் சென்றார். இங்கு 4 நாட்கள் வரை தங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓய்வு எடுப்பார் எனத் தெரிகிறது.

Tags : DMK ,Chief Minister ,Kodaikanal ,Madurai ,Tamil Nadu Assembly ,Tamil Nadu ,M.K. Stalin ,
× RELATED பார்சன்ஸ்வேலி பகுதியில் ஏற்பட்டுள்ள...