சண்டிகர்: அலுவலக மின்னஞ்சலில் பயன்படுத்தப்பட்ட ஆபாச வார்த்தை பாலியல் சீண்டலாகாது என பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய பெண் ஊழியர், கடந்த 2018ம் ஆண்டு தனது உடல்நலக் குறைவு காரணமாக 4 நாட்கள் மருத்துவ விடுப்பு கோரியிருந்தார். அப்போது அந்த நிறுவனத்தின் இயக்குனர், முக்கியமான பணி இருப்பதை காரணம் காட்டி விடுப்பு அளிக்க மறுத்ததோடு, மின்னஞ்சல் வாயிலாக ஆபாசமான ஒரு ஆங்கில வார்த்தையை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த அந்த ஊழியர் அன்றைய தினமே தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து அந்த நிறுவனத்திற்கும் ஊழியருக்கும் இடையே சட்ட ரீதியான நோட்டீஸ்கள் பரிமாறப்பட்ட நிலையில், சுமார் 4 மாதங்கள் காலதாமதமாக கடந்த 2019ம் ஆண்டு அந்த இயக்குனர் மீது பாலியல் தொல்லை அளித்ததாக போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். இந்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி அரியானா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி கீர்த்தி சிங், கடந்த சில தினங்களுக்கு முன் தீர்ப்பு வழங்கினார்.
அதில், ‘மின்னஞ்சலில் பயன்படுத்தப்பட்ட அந்த ஆபாச வார்த்தை நாகரிகமற்றது மற்றும் மரியாதைக்குறைவானது என்பதில் ஐயமில்லை. ஆனால், அந்த வார்த்தை பாலியல் ரீதியான உள்நோக்கத்தையோ அல்லது ஒரு பெண்ணின் கண்ணியத்தை பாதிக்கும் வகையிலான சமிக்ஞைகளையோ கொண்டிருக்கவில்லை. இந்திய தண்டனைச் சட்டம் 354ஏ பிரிவின் கீழ் ஒருவரை தண்டிக்க தேவையான பாலியல் ரீதியான அத்துமீறல் அந்த மின்னஞ்சலில் இல்லை. அலுவலக ரீதியான பிரச்னையில் பயன்படுத்தப்பட்ட தவறான வார்த்தையை பாலியல் பலாத்கார முயற்சியாகவோ அல்லது பாலியல் தொல்லையாகவோ கருத முடியாது’ என்று கூறி இயக்குனர் மீதான வழக்கை ரத்து செய்தார்.
மேலும், அந்த இயக்குனர் சண்டிகரில் உள்ள ஏழை நோயாளி நல நிதிக்கு 20,000 ரூபாயை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். மின்னஞ்சலில் பயன்படுத்தப்பட்ட அந்த ஆபாச வார்த்தை நாகரிகமற்றது மற்றும் மரியாதை குறைவானது என்பதில் ஐயமில்லை
