திருப்பதி – கொளுத்தும் வெயில் காரணமாக கணிசமாக குறைந்த பக்தர்கள் வருகை

திருமலை: நாடு முழுவதும் கோடை வெப்பம் படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், ஆந்திராவிலும் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்து காணப்படுகிறது. இதன் ஒருபகுதியாக சித்தூர்,திருப்பதி உள்ளிட்ட பல ஆந்திர மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது. இந்நிலையில் மாநிலத்தின் பல பகுதிகளில் தற்போதே கடும் வெப்ப அலை வீசி வருகிறது. இதன் காரணமாக, திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

திருப்பதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன் ஹீட்டை தாண்டிச் செல்வதால், திருப்பதி கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையில் தாக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த மாதங்களில் சராசரி தினசரி பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக அதாவது 80,000-க்கும் மேல் இருந்த நிலையில், தற்போதைய கடும் வெப்ப அலை காரணமாக கடந்த சில நாட்களில் அந்த எண்ணிக்கை 70,000-க்கும் கீழே குறைந்துவிட்டதாக அங்கிருந்து வரும் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருப்பதி கோவிலில் நேற்று சுமார் 69,270 பேர் தரிசனம் செய்ததாகவும், 33, 180 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனிடையே திருப்பதி தேவஸ்தான கோயிலுக்கு வரும் பக்கதர்களை பாதுகாக்கும் வகையில், சுமார் ரூ.3.21 கோடி மதிப்பிலான கோடைக்கால நிவாரணத் திட்டத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானம் தொடங்கியுள்ளது.

இதில் அதிக மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் குளிர்ச்சி தரும் வர்ணம் பூசுதல், வரிசைகளில் காத்திருப்போருக்கு வெயிலின் தாக்கத்தைத் தவிர்க்கும் வகையில் நிழற்குடைகளை அமைத்தல் மற்றும் குடிநீர் வசதிகளை மேம்படுத்துதல் போன்றவை அடங்கும். தென் மாநிலங்களில் கோடை விடுமுறை தொடங்கிவிட்ட போதிலும், கடும் வெப்பம் காரணமாக திருப்பதிக்கான பக்தர்கள் வருகையில் சரிவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Related Stories: