×

அப்பாடா தேர்தல் முடிந்தது பறக்கும் படை தொல்லை இனி இல்லை: வியாபாரிகள் மகிழ்ச்சி

 

ஊட்டி: தேர்தல் கெடுபிடிகள் முடிந்த நிலையில், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தல் நடத்துவது குறித்து கடந்த மார்ச் மாதம் 15ம் தேதி அறிவிக்கப்பட்டது. அன்றைய தினம் முதல் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. தேர்தல் சமயங்களில் வாக்காளர்ளுக்கு பணம் பட்டுவாடா செய்வது மற்றும் பரிசு பொருட்கள் போன்றவைகளை அரசியல் கட்சியினர் வழங்குவதை தடுப்பதற்காக ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டது. அதேபோல், பரிசு பொருட்கள் மற்றும் நகைகள் போன்றவை எடுத்து செல்லவும் தடை விதிக்கப்பட்டது.

இதனால், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தங்களது மருத்துவ செலவுகளுக்கு கூட ரூ.50 ஆயிரத்திற்கு மேல் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அதனையும் மீறி, சிலர் வியாபாரம் மற்றும் வேறு செலவுகளுக்காக கொண்டு சென்ற பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். உரிய ஆவணங்கள் செலுத்தி இந்த பணத்தை தேர்தல் ஆணையத்திடம் வாங்குவதற்குள் படாதபாடுபட்டு வருகின்றனர். இதனால், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் எந்த ஒரு தேவைகளுக்காகவும் வெளி மாவட்டங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அதேபோல், கோடை விடுமுறை அளித்தும் குடும்பத்தினருடன் சுற்றுலா செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகினர்.

இந்நிலையில், நேற்று தேர்தல் முடிந்த நிலையில், நேற்று மாலை 6 மணி முதல் வாகன தணிக்கை குறைந்துள்ளது. வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வெளி மாவட்டங்களுக்கு சென்று பொருட்களை மொத்தமாக வாங்க நேற்றே செல்லத் துவங்கினர். 2 மாதங்களாக எந்த ஒரு அத்தியாவசிய தேவைகளுக்கு கூட அதிக பணம் எடுத்து செல்ல முடியாத நிலையில் நேற்று மாலை முதல் தங்களது பணிகளை வழக்கம்போல் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் துவக்கியுள்ளனர்.

 

Tags : Apapa ,Tamil Nadu ,
× RELATED மாநிலத்திலேயே அதிகபட்சமாக சேலம்...