லா லிகா கால்பந்து அம்பாய் பாய்ந்த எம்பாபே கோல்: ரியல் மாட்ரிட் அமர்க்கள வெற்றி

மாட்ரிட்: லா லிகா கால்பந்து போட்டியில் நேற்று, ரியல் மாட்ரிட் அணி, அலாவஸ் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி வாகை கண்டது. லா லிகா கால்பந்து போட்டிகள் ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் நடந்து வருகின்றன. நேற்று நடந்த போட்டியில் பலம் வாய்ந்த ரியல் மாட்ரிட் – டிபோர்டிவோ அலாவஸ் அணிகள் மோதின. துவக்கம் முதல் மாட்ரிட் அணி வீரர்கள் அட்டகாசமாக ஆடி பந்தை பெரும்பாலும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

போட்டியின் 30வது நிமிடத்தில் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான கைலியன் எம்பாபே முதல் கோல் போட்டு கரவொலி பெற்றார். அவரைத் தொடர்ந்து மற்றொரு நட்சத்திர வீரர் வினிசியஸ் ஜூனியர், 50வது நிமிடத்தில் மேலும் ஒரு கோல் போட்டு அசத்தினார். அதனால், 2 கோல்களுடன் மாட்ரிட் முன்னிலை பெற்றிருந்த நிலையில், போட்டியின் கடைசி கட்டத்தில் 90+3வது நிமிடத்தில் அலாவஸ் அணியின் டோனி மார்டினெஸ் தனது அணிக்காக முதல் கோல் போட்டார்.

அதன் பின் கோல் விழாததால், 2-1 என்ற கோல் கணக்கில் ரியல் மாட்ரிட் அட்டகாச வெற்றியை பதிவு செய்தது. இதையடுத்து, 32 போட்டிகள் முடிவில் ரியல் மாட்ரிட் அணி, 23 வெற்றி, 5 தோல்வி, 4 டிராக்களுடன் 73 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளது. பார்சிலோனா அணி, 31 போட்டிகளில் 26 வெற்றிகளுடன் 79 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் நீடிக்கிறது.

Related Stories: