ஊட்டி : 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி ஊட்டி ஏரியில் படகு போட்டி நடந்தது. சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026ஐ முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக இளம் வாக்காளர்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நீலகிரி பூச்சிப்பிடிப்பான் (நீலகிரி பிளை கேட்ச்சர்) சின்னம் வெளியிடப்பட்டுள்ளது. சின்னத்துடன் மலையின் குரல், நம் வாக்கு! என்ற விழிப்புணர்வு வாசகம் இடம் பெற்றுள்ளது. சின்னத்திற்கு நீலா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
கடந்த தேர்தலின் போது வாக்குப்பதிவு குறைந்த ஊட்டி தொகுதியில் 5 வாக்குச்சாவடிகள், கூடலூர் தொகுதியில் 2 வாக்குச்சாவடிகளிலும், குன்னூர் தொகுதிகளில் 6 வாக்குச்சாவடிகளிலும் என 13 வாக்குச்சாவடிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டன.
இதுதவிர அனைத்து பகுதிகளிலும் ரங்கோலி கோலம், சிலம்பாட்டம், விழிப்புணர்வு சைக்கிள் பேரணி, கலாச்சார நிகழ்ச்சிகள், மாரத்தான் ஓட்டம், கிரிக்கெட் போட்டி, ஓவியம், கட்டுரை போட்டிகள், பழங்குடியின கிராமங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி ஊட்டி படகு இல்லத்தில் பெண்களுக்கான படகு போட்டிகள் நடந்தது. இதில் விதவிதமாக விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி படகு போட்டியில் பங்கேற்றனர்.
தொடர்ந்து ரங்கோலி கோலம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து மண்பாண்ட கலைஞர் சுகனேஷ்வரன் தயாரித்த களிமண்ணால் உருவாக்கப்பட்ட நீலகிரி பிளை கேட்சர் மற்றும் வரையாடு, யானை உள்ளிட்டவற்றை கொண்ட பொம்மைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இதில் தேர்தல் விழிப்புணர்வு அலுவலர் ராஜேஷ்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
