காரைக்குடி: சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரத்தின் காரைக்குடி சுப்பிரமணியபுரம் முதல் வீதியில் உள்ளது. இங்கு நேற்று தேர்தல் பறக்கும் படை அதிகாரி, எம்பி அலுவலகத்தில் சோதனை நடத்தினார். அப்போது அலுவலகத்தின் பின்பகுதியில் உள்ள கொட்டகையில் சிலர் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். அவர்களிடம் சோதனை நடத்தியதில் ஒரு கட்டைப்பையில் பணம் இருந்தது.
அதனை பறிமுதல் செய்து பறக்கும் படை வாகனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கிருந்த நிர்வாகிகள் சிலர் பணத்தை எண்ணி எடுத்துச் செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதன்படி வாகனத்தில் வைத்து பணத்தை எண்ணி உள்ளனர். அதில் ரூ.13.45 லட்சத்துக்கு மேல் இருந்துள்ளதாக தெரிகிறது. பணத்தை எண்ணி முடித்து கட்டைப்பையில் வைத்தபோது திடீர் என கூட்டமாக வந்த நிர்வாகிகள் சிலர் பணத்தை பறித்துக்கொண்டு தப்பியோடினர்.
தவிர வாகனத்தின் சாவியையும் பறித்து தூக்கி எறிந்து விட்டு ஓடியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், சம்பவம் குறித்து உயரதிகாரிகளுக்கு புகார் அளித்துள்ளனர். தப்பியோடிய நபர்களை வீடியோ பதிவுகளை கொண்டு தேடி வருகின்றனர். அலுவலக பணியாளர் பழனியப்பனை, காரைக்குடி வடக்கு காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
