- புலனாய்வு ஐ.ஜி.
- திமுக
- டி.ஆர்.பாலு
- தலைமை தேர்தல் ஆணையம்
- சென்னை
- தமிழ்நாடு புலனாய்வு ஐ.ஜி.
- செந்தில்வேலன்
- அவினாஷ் குமார்
- ஐபிஎஸ்
- பொருளாளர்
- தலைமை தேர்தல் ஆணையம். ...
சென்னை: தமிழக உளவுத்துறை ஐ.ஜி. செந்தில்வேலன் இடமாற்றம் செய்யப்பட்டு, அவருக்குப் பதிலாக அவினாஷ் குமார் ஐ.பி.எஸ் நியமிக்கப்பட்டதற்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையத்திற்கு திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:
உளவுத்துறை ஐ.ஜி.,யாக இருந்த செந்தில் வேலன் மீது எந்தப் புகாரும் இல்லாத நிலையில், எந்தவிதமான முகாந்திரமும் இன்றி இந்த திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 324ன் படி, தேர்தலை நடத்துவது மற்றும் அதுதொடர்பான பணிகளை கண்காணிப்பது மட்டுமே தேர்தல் ஆணையத்தின் அதிகாரம். உளவுத்துறை ஐ.ஜி.,யின் பணிக்கும் தேர்தல் நடத்தும் முறைக்கும் நேரடித் தொடர்பு ஏதுமில்லை.
மாநில அரசின் நிர்வாக அதிகாரங்களில் தேர்தல் ஆணையம் தேவையற்ற முறையில் தலையிடுவதாக திமுக கருதுகிறது. உளவுத்துறை ஐ.ஜி என்பது சட்டம் ஒழுங்கு, முக்கியப் பிரமுகர்களின் பாதுகாப்பு, பயங்கரவாத தடுப்புப் பிரிவு போன்ற மிக முக்கியமான பணிகளை கவனிப்பதாகும். தற்போது முக்கிய மற்றும் உணர்வுப்பூர்வமான பணிகள் நடைபெற்று வரும் வேளையில், இந்த இடமாற்றம் மாநிலத்தின் பாதுகாப்பைப் பாதிக்கும். புதிய அதிகாரி இந்த பணிகளை புரிந்துகொள்ள கூடுதல் காலம் எடுக்கும்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அவினாஷ் குமாரின் மனைவி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒன்றிய பாஜ அரசால் நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இதனால், இந்த நியமனத்தில் அரசியல் தலையீடும், பாரபட்சமாக செயல்படும் வாய்ப்பும் இருப்பதாக திமுக கருதுகிறது. எனவே, நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், கடந்த 19ம் தேதி பிறப்பிக்கப்பட்ட இந்த இடமாற்ற உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த கடிதம் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், இந்த ஐ.ஜி இடமாற்ற விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
