சென்னை: சொத்துக்குவிப்பு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யுமாறு அமலாக்கத் துறைக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சேர்த்தது, முறைகேடுகளில் ஈடுபட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.காமராஜ், கே.சி.வீரமணி, கே.பி.அன்பழகன், அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியின் நண்பர் சேலம் இளங்கோவன், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா ஆகியோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கின் அடிப்படையில், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அவர்கள் வழக்குப்பதிவு செய்யுமாறு அமலாக்கத் துறைக்கு உத்தரவிடக் கோரி திமுக மாநிலங்களவை உறுப்பினர் இரா.கிரிராஜன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகளை தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்குகள், தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கிரிராஜன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக சொத்துக்குவிப்பு வழக்குகள் தொடர்பாக பொது தளங்களில் தகவல்கள் இடம்பெற்றுள்ள நிலையில் குறிப்பிட்ட சிலர் மீது நடவடிக்கை எடுக்காததன் மூலம் அமலாக்கத் துறை கடமை தவறி விட்டது. சட்டப்பூர்வ அமைப்பான அமலாக்கத் துறை, கடமையை செய்ய தவறும் போது நீதிமன்றம் கேள்வி எழுப்பலாம். கூட்டணியில் இருப்பதால் முன்னாள் அமைச்சர்கள் மீது அமலாக்கத் துறை நடவடிக்கை எடுக்கவில்லை. இது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றார்.
அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யுமாறு அமலாக்கத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட முடியாது. அதிகாரிகள் தான் முடிவெடுக்க முடியும். அரசியல் கட்சியின் எம்.பி. எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக தாக்கல் செய்த இந்த வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது. சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின்படி வழக்கு குறித்த விவரங்களை தெரிவிக்க முடியாது.
இது பொதுநல வழக்கு அல்ல. இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்றார். இதற்கு பதிலளித்த மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, பொதுமக்களின் பணம் சுரண்டப்படும்போது மக்கள் யாராக இருந்தாலும் வழக்கு தொடர முடியும். எனவே, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததுதான் என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
