* பெற்றோர்களுக்கு அறிவுரை
மதுரை : கோடை விடுமுறை காலத்தில் ஆபத்தான நீர்நிலைகளில் மாணவர்கள் குளிப்பதை அனுமதிக்க கூடாது என பெற்றோர்களுக்கு பள்ளிக்கல்வி துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் கடந்த ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை காலத்தை மாணவர்கள் பாதுகாப்பாகவும், பயனுள்ளதாகவும் கழிக்க பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும் என பள்ளிக்கல்வி துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து அத்துறையின் இயக்குனர் தெரிவித்ததாவது: கோடை வெப்பம் அதிகரித்துள்ளதால திறந்த வெளியில் விளையாடும் போது மாணவர்கள் அதிகளவில் தண்ணீர் அருந்த வேண்டும். சூரிய வெப்பத்திலிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்லவும், வெயிலில் விளையாடவும் வேண்டாம். ஆபத்தான பொருட்களை குழந்தைகள் அணுக முடியாதவாறு பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
நீர்நிலைகளில் நீச்சல் தெரியாமல் குளிப்பது ஆபத்தானது என்பதால் கடல், ஆறு, ஏரி, குளம் போன்ற இடங்களில் மாணவர்கள் குளிக்க பெற்றோர்கள் அனுமதிக்க கூடாது விடுமுறை நாட்களில் மாணவர்கள் தனிமை உணர்வை எதிர்கொள்ளாமல் இருக்க குடும்பத்தினருடன் மற்றும் நண்பர்களுடன் இணைந்து செயல்பட ஊக்குவிக்க வேண்டும். கைபேசி பயன்பாட்டை குறைத்து, சமூக தொடர்புகளை அதிகரிக்க வேண்டும்.
மாணவர்களின் வளர்ச்சிக்கு தேவையான சத்தான மற்றும் சமச்சீரான உணவுகளை வழங்க வேண்டும். குறிப்பாக கோடை காலத்திற்கு ஏற்ற பழவகைகள் மற்றும் பாரம்பரிய உணவுகளை பெற்றோர்கள் வழங்க வேண்டும்.
மாணவர்களை அருகிலுள்ள நூலகங்களுக்கு அழைத்து சென்று வாசிப்பு பழக்கத்தை உருவாக்க வேண்டும். அவர்களின் ஆர்வத்திற்கு ஏற்ப காமிக்ஸ், பொது அறிவு, நீதி கதைகள் போன்ற புத்தகங்களை படிக்க ஊக்குவிக்க வேண்டும்.
இசை, நடனம், ஓவியம் போன்ற திறன்களை வளர்க்கும் வகையில் பயிற்சிகளிலும் ஈடுபடுத்த வேண்டும். வீட்டில் சிறு வேலைகளில் உதவவும், தோட்ட பராமரிப்பில் ஈடுபடவும் ஊக்குவிக்க வேண்டும். இந்த அறிவுரைகளை மாணவர்களின் பெற்றோருக்கு கொண்டு சேர்க்க பள்ளி தலைமையாசிரியர்கள் மூலம் முதன்மை கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
