×

நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு தமிழகத்தை போல், புதுச்சேரியிலும் போலீசாருக்கு கூலிங் ஹெல்மெட் வழங்கப்படுமா?

புதுச்சேரியில் கடந்த மார்ச் முதல் வாரத்தில் இருந்தே வெயில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது.

இதனால் வேலைக்கு செல்வோர் தவிர்த்து, இல்லத்தரசிகள், முதியோர்கள் மற்றும் பொதுமக்கள் பகலை தவிர்த்து காலை, மாலை நேரங்களில் மட்டுமே வீட்டை விட்டு வெளியே தேவையான இடங்களுக்கு சென்று வருகின்றனர். சுட்டெரிக்கும் வெயிலுக்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைக்கு செல்வோர்கள் கடும் அவதியடைந்தனர்.

குறிப்பாக புதுச்சேரியில் உள்ள இந்திரா காந்தி சிக்னல், ராஜிவ் காந்தி சிக்னல், அண்ணா சிலை சிக்னல், ராஜா தியேட்டர் சிக்னல், அஜந்தா சிக்னல் உள்ளிட்ட சிக்னல்களில் வாகன ஓட்டிகள் சுமார் 60 நிமிடங்களிலிருந்து 180 நிமிடம் வரையில் காத்திருப்பது மேலும் வேதனை அடைய செய்தது.

இதனை கருத்தில் கொண்டு பொதுப்பணித்துறை சார்பில் வாகன ஓட்டிகளுக்கு ஏதுவாக வெயில் தாக்கத்தை குறைக்கும் வகையில் பசுமை பந்தல் அமைத்தது வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலை தினம், தினம் நாள் முழுவதும் பணியாற்றும் போலீசாருக்கு விதிவிலக்காக உள்ளது. ஏனெனில் புதுச்சேரியில் உள்ள மேற்குறிப்பிட்ட சிக்னல் மற்றும் பொது வெளியில் வெயிலில் பணிபுரியும் போக்குவரத்து போலீசார், சட்டம்-ஒழுங்கு காவல் துறையினர் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக மதிய நேரங்களில் சாலைகளில் நின்று பணிபுரியும் போலீசாரின் உடல் நலம் குறித்து கவலைகள் எழுந்துள்ளன.

தமிழகத்தின் சில பகுதிகளில், குறிப்பாக நகர் புறங்களில் வெயிலின் தாக்கத்தை குறைக்க கடந்தாண்டு போலீசாருக்கு ‘கூலிங் ஹெல்மெட்’ வழங்கும் முயற்சி தமிழகம் முழுவதும் சிறப்பான வரவேற்பை ஏற்படுத்தியது. அதேபோன்று புதுச்சேரியிலும் இந்த திட்டம் அமல்படுத்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பும் தற்போது போலீசாரிடம், குறிப்பாக போலீசாரின் குடும்பத்தினரிடையே எழுந்துள்ளது.

புதுச்சேரியில் தற்போது கோடைகால வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு போலீசாருக்கு பல மணி நேரம் நேரடி வெயிலில் நிற்க வேண்டியிருப்பதால், உடல் சோர்வு மற்றும் நீரிழிவு பிரச்னைகள் அதிகம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

இந்த கூலிங் ஹெல்மெட் என்பது வெயிலின் சூட்டை குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட சிறப்பு தலைக்கவசமாகவும், இதில் சிறிய பேன், குளிரூட்டும் படலம் அல்லது காற்றோட்ட வசதிகள் உள்ளதால், நீண்ட நேரம் வெளியில் பணியாற்றும் போலீசாருக்கு நிவாரணம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

ஆகவே, இதனை சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் போலீசாரின் நலனை கருத்தில் கொண்டு அதிகரித்து வரும் வெப்ப அலைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புதுச்சேரி அரசு நிர்வாகமும், காவல்துறை தலைமையும் கூலிங் ஹெல்மெட், நீர்மோர் வசதி, ஓய்வு இடங்கள் போன்ற அடிப்படை வசதிகளை வழங்க வேண்டும் என எதிர்பார்த்து வருகின்றனர்.

Tags : Tamil Nadu ,Puducherry ,
× RELATED ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு சித்தாந்தம் என...