×

கோடை வெப்பம் தணிந்தது மூணாறில் திடீர் ஆலங்கட்டி மழை

*விவசாயிகள் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

​மூணாறு : மூணாறு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை பெய்த திடீர் ஆலங்கட்டி மழையினால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் இப்பகுதி மக்களும், சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.

தென்னகத்தின் காஷ்மீர் என்று அழைக்கப்படும் கேரள மாநிலம் மூணாறில், கடந்த சில வாரங்களாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.

இதன் காரணமாக மூணாறு மற்றும் அதனைச் சுற்றியுள்ள காலனி பகுதிகளில் கடும் வறட்சி நிலவியதுடன், குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படத் தொடங்கியது. இந்த நிலையில், நேற்று காலை முதலே மூணாறு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

பிற்பகல் 3 மணி அளவில் திடீரென இடி, மின்னலுடன் கூடிய கோடை மழை பெய்யத் தொடங்கியது. மூணாறு சுற்றுப்புற பகுதியில் கனமழையுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.சுமார் அரை மணி நேரம் நீடித்த இந்த கனமழையினால் சாலைகளிலும், வீடுகளின் முன்பும் ஆலங்கட்டிகள் வெண் போர்வை போல தேங்கிக் கிடந்தன.

கடந்த மார்ச் மாதம் தேவிகுளம் உட்பட்ட சில பகுதிகளில் மட்டும் ஆலங்கட்டி மழை பெய்த நிலையில் தற்போது மீண்டும் ஆலங்கட்டி மழை பெய்ததை சிறுவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள், இந்த காட்சியை ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

சமீப நாட்களாக நிலவி வந்த வறட்சிக்கு இந்த மழை ஒரு தீர்வாக அமைந்துள்ளதால் விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர். இருப்பினும், சில பகுதிகளில் பெய்த அதிவேக மழையினால் பயிர்களுக்குச் சிறு அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Tags : Munar ,Munaru ,Kashmir of the South ,
× RELATED ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு சித்தாந்தம் என...