தர்மபுரி : தர்மபுரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கடும் வெயிலில் இருந்து மக்கள் தங்களை தற்காத்து கொள்ள நீச்சல் குளம் மற்றும் ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் குளித்து வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் கொளுத்தி வருகிறது. காலை 8 மணிக்கு தொடங்கும் வெயிலின் தாக்கம் மாலை 5 மணிவரை நீடிக்கிறது.
இதனால் குழந்தைகள், முதியவர்கள் அனைத்து தரப்பு மக்களும் கடும் அவதிக்குள்ளாகின்றனர். குறிப்பாக காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெயிலின் தாக்கம் உச்சத்தில் உள்ளது. அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
வீடு, அலுவலகங்களில் மின்விசிறி இயங்கினாலும் அனல்காற்று வீசுகிறது. கடந்த சில நாட்களாகவே தர்மபுரி மாவட்டத்தில் சர்வ சாதாரணமாக 100 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெயில் பதிவாகி வருகிறது. கோடை வெப்பத்தை தணிக்க நீச்சல் குளம், ஏரி குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் மக்கள் குளித்தனர்.
விவசாய கிணறுகள், ஒகேனக்கல் காவிரி ஆறு, தென்பெண்ணை ஆறு, தடுப்பணைகள், ஏரிகளில் தேங்கியுள்ள நீரில் குளித்து வெப்பத்தை தணித்தனர். தர்மபுரி செந்தில்நகர் நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்சியாளர்கள் மற்றும் பொது மக்கள் குளித்து வெப்பத்தை தணித்தனர்.
