×

எளம்பலூர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா? பறக்கும் படையை கண்டதும் பணத்தை வீசி சென்ற வாலிபர்

பெரம்பலூர், ஏப். 20: எளம்பலூரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக கட்டுப்பாட்டு அறைக்கு வரப்பெற்ற புகாரின் அடிப்படையில் பறக்கும் படையினர் ஆய்வு மேற்கொண்ட போது ரூ.17,000 பணத்தை கீழே போட்டு விட்டு ஓடியதால் கைப்பற்றப் பட்ட பணம் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது. பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எளம்பலூர் ஊராட்சியிலுள்ள ஒரு இடத்தில் வினோத் என்பவர் வீட்டில் வைத்து பொது மக்களுக்கு பணம் வழங்கப்படுவதாக தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்தது.

இதனை தொடர்ந்து தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து, எளம்பலூர் அருகில் ஆய்வு பணியில் இருந்த தாசில்தார் மாயகிருஷ்ணன் தலைமையிலான பறக்கும் படை குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் பறக்கும் படையினர் எளம்பலூர் கிராமத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, வினோத் என்பவர் பறக்கும் படையினரின் வாகனத்தை பார்த்தவுடன் கையில் வைத்திருந்த ரூ.17,000 பணத்தை கீழே போட்டுவிட்டு ஓடிவிட்டார்.

வீசப்பட்ட ரூ.17,000 ரொக்கத்தை பறக்கும் படையினர் கைப்பற்றி பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அனிதா அலுவலகத்தில், வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் பாரதி வளவனிடம் ஒப்படைத்தார்.இது தொடர்பாக பெரம்பலூர் காவல் நிலையத்தில் வட்டாட்சியர் மாயகிருஷ்ணன் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags : Elambalur ,Perambalur ,
× RELATED சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் பெருந்திருவிழா