ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் காவல் நிலைய கட்டுப்பாட்டில் 73 கிராமங்கள் உள்ளது. இதில், ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 30க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள், மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில், குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களையும், மணல், செம்மரம், விபத்தில் சிக்கிய வாகனங்கள், ரேஷன் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்திய பைக்குகள், டிராக்டர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான வாகனங்களை பறிமுதல் செய்து, பெரியபாளையம் காவல் நிலையம் முன்பும், மீதமுள்ள வாகனங்கள் காவலர் குடியிருப்பு பகுதிகளிலும் பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்த வாகனங்கள் வெயில், மழையில் நனைந்து எதற்குமே உதவாமல் துருப்பிடித்து காயலான் கடைக்கு செல்லும் அளவுக்கு மாறிவிட்டது. மேலும், பல நாட்களாக மக்கி மண்ணோடு மண்ணாகி வரும் இந்த வாகனங்களை ஏலம் விட வேண்டும் அல்லது இந்த வாகனங்கள் மீது உள்ள வழக்குகளை விரைந்து முடித்து உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என வாகன உரிமையாளர்களும், பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
