சென்னை: பெரம்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் பகுதியில் திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகரை ஆதரித்து நேற்று மாலை நடிகர் சத்யராஜ் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவர் பேசியதாவது: 2019ம் ஆண்டு சட்டமன்ற இடைத்தேர்தலில் 60,000க்கு மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் ஆர்.டி.சேகர் வெற்றி பெற்றிருக்கிறார். இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்து உங்களுக்கு சேவை செய்துள்ளார். இவர் தான் அரசியல்வாதி, அவர் செய்வதுதான் அரசியல்.
அரசியலில் வேலை செய்ய வேண்டும், மக்களுக்கு சேவை செய்துவிட்டு அதன் பிறகு பதவிக்காக ஆசைப்பட வேண்டும். நாங்கள் எல்லாம் பெரியார் வழியில் வந்தவர்கள், அண்ணா வழியில் வந்தவர்கள், கலைஞர் வழியில் வந்தவர்கள். நாங்கள் தலைக்கு மேலே இருப்பதை நம்பி வாழ்பவர்கள் அல்ல, தலைக்கு உள்ளே இருப்பதை நம்பி வாழ்கிறவர்கள். மாற்றம் வேண்டும், மாற்றம் வேண்டும் என்று ஏமாற்றத்தோடு கூடி உங்களை நீங்கள் ஏமாற்றி கொள்ளாதீர்கள். ஆர்.டி.சேகர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால் நீங்கள் நேரில் வந்து கேட்கலாம்.
ஆனால் வேறு யாருக்காவது வாக்களித்தால் அவரை நீங்கள் சென்று நேரில் கூட பார்க்க முடியாது. மேடையில் பேசிய குறைந்த சம்பளம் வாங்கும் எண்ணையே உங்களால் இதன் பிறகு பார்க்க முடியாது, மிகப்பெரிய சம்பளம் வாங்கும் ஒருவரை உங்களால் பார்க்க முடியுமா?. நேற்று டெல்லியில் நடந்த சம்பவத்திற்காக இனிப்புகள் வழங்கப்பட்டது. மே 4ம் தேதி மீண்டும் நாம் இனிப்பு கொடுக்க உள்ளோம். உதய சூரியனை தவிர்த்து நீங்கள் யாருக்கு ஓட்டு போட்டாலும், அது தாமரைக்குத்தான் செல்லும்.
முதல்வர் சொன்னது போல போட்டி தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்கும்தான். டெல்லியை நாம் உள்ளே விடக்கூடாது, அதற்கு அரணாக இருப்பது திராவிட மாடல்தான். கில்லி திரைப்படம் மீண்டும் வந்தபோது கூட என்னுடைய பேரக் குழந்தைகளுடன் அமர்ந்து நான் படம் பார்த்தேன், படத்திற்காக எனக்கு விஜய்யை பிடிக்கும். கலைஞர் சமூகத்திற்காக போராடினார், அறிஞர் அண்ணா, பெரியார் இவர்கள் அனைவரும் மக்களுக்காக இருந்தவர்கள், இவர்கள் அனைவரையும் நமக்கு பிடிக்கும்.
விஜய் ஏன் நமக்கு பிடிக்கும், நன்றாக ஆட்டம் ஆடுவார், நடிப்பார். அவர் சினிமாவில் நடித்தால் நமக்கு பிடிக்கும், அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் மீண்டும் அவரை சினிமாக்கு அனுப்பி விட வேண்டும். விஜய் கட்சி ஆரம்பித்த உடனே என்னுடைய கொள்கை தலைவர் தந்தை பெரியார், அம்பேத்கர் என்று கூறினார். இளைஞரிடம் இந்த மாபெரும் சிந்தாந்தத்தை கொண்டு சேர்க்கிறார் என்று எனக்கு சந்தோஷமாக இருந்தது. அதன் பிறகு பேச பேச தமிழ்நாடு முதலமைச்சரை ஸ்டாலின் சார் என்று குறிப்பிட்டார்.
அதன் பிறகு ஸ்டாலின் அங்கிள் என்று கூறுகிறார். இவர் மரியாதை இல்லாமல் முதலமைச்சரை பேசுவது எனக்கு சங்கடமாக இருந்தது. தலைவா படத்தின் போது ஜெயலலிதா அம்மாவிடம் அம்மா அம்மா படத்தை வெளியே விடுங்கள் என்று பேசியது போல பேசுவார் என்று நினைத்தேன். ஆனால் ஏன் முதலமைச்சரிடம் இவ்வாறு பேசுகிறார் என்று எனக்கு யோசனையாக இருந்தது.
முதலமைச்சரை ஸ்டாலின் அங்கிள் என்று கூறுகிறார், இதுவே ஜெயலலிதாவிடம் சென்று ஆண்டி என்று கூறி இருந்தால் கொத்து பரோட்டா போட்டு இருப்பார்கள். முதலமைச்சர் பெருந்தன்மையோடு இருக்கிறார் என்பதற்காக நீங்கள் இவ்வாறு பேசக்கூடாது. உங்களுடைய மாஸ் எல்லாம் ஓட்டாக மாறாது. இவ்வாறு அவர் பேசினார்.
