×

தினகரன் நாளிதழ் நடத்தும் மாபெரும் கல்வி கண்காட்சி தொடங்கியது: ஏராளமான மாணவ, மாணவிகள் ஆலோசனை பெற்றனர்: இன்றும் நடைபெறுகிறது

சென்னை: தினகரன் நாளிதழ் மற்றும் சென்னை விஐடி கல்லூரி இணைந்து நடத்தும் நடத்தும் மாபெரும் கல்விக் கண்காட்சி நேற்று தொடங்கியது. இதில், ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு ஆலோசனை பெற்றனர். தினகரன் நாளிதழ் மற்றும் சென்னை விஐடி கல்லூரி இணைந்து நடத்தும் மாபெரும் கல்வி கண்காட்சி தொடக்க விழா நேற்று காலை 10 மணிக்கு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தொடங்கியது. விழாவிற்கு தினகரன் நாளிதழ் நிர்வாக இயக்குனர் ஆர்.எம்.ஆர் ரமேஷ் முன்னிலை வகித்தார்.

இதில், சென்னை விஐடி துணை தலைவர் ஜி.வி.செல்வம், ராஜ லட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி டீன் ஆர்.ரகு, பாரத் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் துணை தலைவர் ஆர்.எம்.சுரேஷ், சென்னை அமிர்தா குரூப் தலைவர் பூமிநாதன், பி.எஸ்.அப்தூர் ரகுமான் கிரெசென்ட் இன்ஸ்டிடியூட் ரிஜிஸ்திரார் ராஜா உசேன், தனலட்சுமி காலேஜ் ஆப் இன்ஜினியரிங் சேர்மன் வி.பி.ராமமூர்த்தி, ரெமோ குரூப் ஆப் இன்ஸ்டிடியூஷன்ஸ் டைரக்டர் ரித்திக் பாலாஜி ஆகியோர் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றிக் கண்காட்சியை தொடங்கி வைத்தனர்.

தினகரன் நாளிதழில் நிர்வாக இயக்குநர் ஆர்.எம்.ஆர்.ரமேஷ் விருந்தினர்களுக்கு பொன்னாடை போர்த்தியும் நினைவுப் பரிசுகளை வழங்கியும் வரவேற்றார். தொடர்ந்து, கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை சிறப்பு விருந்தினர்கள் பார்வையிட்டனர். இந்த கண்காட்சியில் 80க்கும் மேற்பட்ட கல்லூரிகள் தங்களது அரங்குகளை அமைத்துள்ளன. காலை 10 மணி முதல் மாலை 6.30 மணி வரை நடக்கிறது.

கல்விக் கண்காட்சியில் உள்நாட்டு படிப்புகள் மட்டுமல்லாமல், வெளிநாட்டில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்படுகிறது. கல்விக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ள கல்லூரிகளின் அரங்குகளை மாணவர்கள், பெற்றோருடன் பார்வையிட்டு விளக்கம் கேட்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரங்குகளில் உள்ள பேராசிரியர்கள், கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலை மற்றும் அறிவியல், பொறியியல், மருத்துவம், விமான தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, அனிமேஷன், அயல்நாட்டுக் கல்வி, நர்சிங், ஊடகம், ஓட்டல் மேலாண்மை, கட்டிடக் கலை, புகைப்படக் கல்வி, வர்த்தகக் கல்வி, கடல்சார் கல்வி, அழகுக் கலை, தீ மற்றும் பாதுகாப்பு, காலணி வடிவமைப்பு, பிளாஸ்டிக், பெட்ரோலியம், ஆடை வடிவமைப்பு, விமானப் பணி, டிரோன் தொடர்பான படிப்புகள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த படிப்புகள் குறித்து மாணவ, மாணவிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும், வெளிநாட்டில் கல்வி பயில விரும்பும் மாணவ-மாணவிகளுக்கான வழிகாட்டுதல்கள் அவர்களுக்கான ஊக்கத்தொகைகள் குறித்த வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டது. இது தவிர கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் மாணவர் சேர்க்கை வழிமுறைகள், கட்டணம் தொடர்பான சந்தேகங்கள், ஊக்கத் தொகை பெறுவது எப்படி, கட்டணச் சலுகைகள் பெறுவது எப்படி உள்ளிட்ட சந்தேகங்களுக்கு விளக்கங்கள் மாணவ-மாணவிகளுக்கு அளிக்கப்படுகிறது.

மேலும், பெற்றோர்களுக்கும் முறையான விளக்கங்களும் கொடுக்கப்படுகிறது. கண்காட்சிக்கு வரும் மாணவ, மாணவிகளுக்கு ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்படுகிறது. கண்காட்சியில் சென்னை மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த ஏராளமான மாணவ, மாணவிகள் தாங்கள் அடுத்து என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என ஆர்வமுடன் ஆலோசனை கேட்டு தெரிந்துகொண்டனர்.

மேலும், அவர்களுக்கு தேவையான விளக்கங்களும் அளிக்கப்பட்டது. இந்த கண்காட்சி மூலம் கல்லூரியில் சேர்பவர்களுக்கு கல்லூரிகள் சார்பில் சிறப்புச் சலுகைகள் வழங்கப்பட்டன. இன்றுடன் இந்த கண்காட்சி நிறைவடைகிறது.

* ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி டீன் ஆர்.ரகு: தினகரன் நடத்தும் கல்விக் கண்காட்சியில் ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியும் இதில் பங்களிக்கிறது. தினகரன் இந்த கண்காட்சியை நடத்துவது சிறப்பானது. இது மாணவர்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் ஒரு பாலமாக உள்ளது. இதுபோன்ற கண்காட்சிகள் நடத்தப்படவில்லை என்றால் இடைத்தரகர்களால் மாணவர்கள் பாதிக்கப்படுவர்கள். இங்கு வரும் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்பட்டு, மாணவர்கள் அவர்கள் விரும்புவதைப் படிக்க முடியும்.

பி.எஸ்.அப்தூர் ரகுமான் கிரெசென்ட் இன்ஸ்டிடியூட் ரிஜிஸ்திரார் ராஜா உசேன்: தினகரன் நடத்தும் கல்விக் கண்காட்சி சிறப்பான முறையில் நடைபெற்றுவருகிறது. மாணவ, மாணவிகளும் பெற்றோர்களும் நேரில் வந்து என்ன படிக்கலாம், எந்தக் கல்வி நிறுவனத்தில் படிக்கலாம் என்பது தொடர்பான தங்களின் ஐயங்களை தீர்த்துக்கொள்ளும் வகையில் தினகரன் நாளிதழ் நடத்துவதன் மூலமாக தலைசிறந்த பல்கலைக்கழகங்களும் கல்வி நிறுவனங்களும் இங்கு வந்து எடுத்துரைக்கிறார்கள்.

இதுபோன்ற சிறந்த கண்காட்சியை நடத்துவதன் மூலமாக பல்லாயிரக்கணக்கானவர்கள் பயன்பெறுகிறார்கள். ரெமோ குரூப் ஆப் இன்ஸ்டிடியூஷன்ஸ் முதல்வர் மற்றும் இயக்குநர் ரித்திக் பாலாஜி: இந்த இடத்தில் பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ளலாம். இதுபோன்ற கண்காட்சிகள் எல்லா இடத்திலும் நடப்பதில்லை. இங்கு எல்லா கல்லூரிகளையும் ஒரே இடத்தில் பார்த்து என்ன படிக்கலாம் உள்ளிட்ட தேவையான தகவல்களைப் பெறலாம்.

தமிழ்நாட்டில் ஏவியேஷன் கோர்ஸ் படிப்பை தொடங்கியது ரெமோ கல்வி நிறுவனம்தான். இங்கு படிக்கும் மாணவர்களுக்கு பகுதிநேர வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தித் தருகிறோம். இந்த படிப்புகளுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் உள்ளன. தனலட்சுமி பொறியியல் கல்லூரி சி.இ.ஓ ரூபா செந்தில்குமார்: 12ம் வகுப்பு முடித்த மானவர்கள் குழப்பமாக இருப்பார்கள். அவர்கள் இந்த கண்காட்சிக்கு வரவேண்டும். அவர்களின் வாழ்வில் இந்த கண்காட்சி முக்கியமான திருப்புமுனையாக இருக்கும்.

மாணவர்கள் படித்து முடித்ததும் வேலைக்குச் செல்லும் வகையில் அவர்களின் துறைசார் அறிவை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறோம். படித்து முடித்ததும் அவர்களுக்கு வேலை கிடைத்துவிடும். சென்னை அமிர்தா கல்வி நிறுவனங்கள் தலைவர் பூமிநாதன்: சென்னை அமிர்தால படிச்ச 31,651 பேருக்கு வேலை வாங்கிக் கொடுத்துள்ளோம். தென்னிந்தியாலயே ஏவியேஷன் காலேஜ்ல சென்னை அமிர்தா முதலிடம்.

விமான நிலையத்தில் பணிபுரிய ஐயடா என்று சொல்லக்கூடிய சர்வதேச பன்னாட்டு விமானப் பயிற்சி முடித்திருக்க வேண்டும். ஆனால், அந்தப் படிப்புக்கு மொத்தமாக ரூ.2 லட்சம் செலவாகும். ஆனால், தினகரன் கல்விக் கண்காட்சியில் கலந்துகொண்டு இந்த படிப்பில் சேர முன்வரும் முதல் 50 மாணவர்களுக்கு இந்த படிப்பை முழுவதுமாக இலவசமாகக் கொடுக்கிறோம்.

Tags : Dinakaran daily ,Chennai ,Chennai VIT College ,Dinakaran Daily and ,Chennai VIP College ,
× RELATED ஏற்கனவே ரூ.1.15 கோடி சிக்கிய நிலையில்...