சென்னை: தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற அனல் பறந்த பிரசாரம் நாளை மறுநாள் (செவ்வாய்) மாலை 6 மணியுடன் ஓய்கிறது. இதை தொடர்ந்து ஏப்ரல் 23ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி (வியாழன்) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மொத்தமுள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளில் 4,023 பேர் போட்டியிடுகின்றனர். திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தவெக என நான்கு முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடந்த ஒரு மாதமாக சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார். மேலும், இந்த கூட்டணிக்கு ஆதரவாக அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வைகோ, பிரேமலதா, திருமாவளவன், சண்முகம், பாலகிருஷ்ணன், முத்தரசன், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்தனர்.
அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடி, அமித்ஷா, அன்புமணி, ஜி.கே.வாசன் உள்ளிட்ட பலரும் பிரசாரம் செய்தனர். இப்படி ஒவ்வொரு கூட்டணி கட்சி தலைவர்களும் தங்களது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக சூறாவளி பிரசாரம் செய்தனர். தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த அனல் பறக்கும் பிரசாரம் வருகிற 21ம் தேதி (நாளை மறுதினம்) மாலை 6 மணியுடன் ஓய்கிறது. அன்று மாலை 6 மணியுடன் அனைத்துக்கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் பிரசாரம் செய்வதை நிறுத்திவிட வேண்டும்.
மாலை 6 மணிக்கு மேல் பிரசாரம் செய்யக்கூடாது. வீடு வீடாக சென்று வேட்பாளர்கள், தலைவர்கள் வாக்கு கேட்கவும் தடை செய்யப்பட்டுள்ளது. தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத நபர்கள் 21ம் தேதி மாலை 6 மணியுடன் தொகுதியை காலி செய்துவிட்டு வெளியேறி விட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அனைத்து தங்கும் விடுதிகள், கல்யாண மண்டபங்களில் போலீசார் சோதனை நடத்தி சம்பந்தம் இல்லாத நபர்களை தொகுதியை விட்டு வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து வருகிற 23ம் தேதி (வியாழன்) தமிழகத்தில் 234 தொகுதியிலும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து 22ம் தேதி (புதன்) மதியத்திற்கு மேல் தமிழகத்தில் மொத்தமுள்ள 75,035 வாக்குச்சாவடி மையங்களுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் ஒவ்வொரு தொகுதிகளுக்கு என தனித்தனியாக நியமிக்கப்பட்டுள்ள மண்டல குழுவினர் கொண்டு வந்து, பொருத்தும் பணியில் ஈடுபடுவார்கள்.
வாக்குப்பதிவு நாள் அன்று பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம், யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்துகொள்ளும் விவி-பேட் இயந்திரங்களில் வேட்பாளரின் பெயர், படம், சின்னம் பொருத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாக்குப்பதிவு மையத்திற்கும் 20 சதவீதம் மின்னணு இயந்திரங்கள் கூடுதலாக வைக்கப்பட்டு இருக்கும். ஏதாவது மிஷின் பழுது ஏற்பட்டால் உடனடியாக பெல் இன்ஜினியர்கள் மூலம் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
தேர்தல் பணியில் மட்டும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போலீசார் என சுமார் 4 லட்சம் பேர் ஈடுபட உள்ளனர். தமிழகத்தில் மொத்தமாக 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 வாக்காளர்கள் உள்ளனர். 18 முதல் 19 வயதுடைய புதிய வாக்காளர்கள் 14 லட்சத்து 59 ஆயிரத்து 039 பேர் உள்ளனர். வாக்குப்பதிவுக்கு இன்னும் 4 நாட்களே உள்ளதால் தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி பதிவாகும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் அன்றைய தினம் இரவு வேட்பாளர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்புடன் ஸ்டாங் ரூமில் வைக்கப்படும். இதை தொடர்ந்து 10 நாட்கள் இடைவெளிக்கு பிறகு, மே மாதம் 4ம் தேதி (திங்கள்) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். அன்றைய தினம் காலை 9 மணிக்கு முதல் சுற்று முடிவு மற்றும் முன்னணி நிலவரம் தெரியவரும்.
