திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் மணல் கடத்தலை கட்டுப்படுத்த மாவட்ட கலெக்டர் மு.பிரதாப் உத்தரவின்படி, தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குநர் முனைவர் லட்சுமி பிரியா தலைமையில், உதவி இயக்குனர் வி.சிவப்ரியா, உதவி புவியலாளர் வி.நித்யா, சிறப்பு வருவாய் ஆய்வாளர்கள் ஏ.சரத், எஸ்.ராஜேஷ் ஆகியோர் கனிமங்கள் கடத்தப்படுகிறதா என்று ஊத்துக்கோட்டை அடுத்த போந்தவாக்கம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது ஆந்திராவில் இருந்து வேகமாக வந்த 2 டாரஸ் லாரிகளை மடக்கி சோதனை நடத்தினர். இதில், ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு சட்டவிரோதமாக மணல் கடத்திவருவது தெரிந்தது. இதையடுத்து 2 டாராஸ் லாரிகளையும் பறிமுதல் செய்து பென்னலூர்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து மணல் கடத்தலுக்கு பின்னணியில் உள்ளவர்கள் யார் என்று விசாரித்து வருகின்றனர்.
