×

டெல்லியில் இருந்து ஆளத்துடிக்கும் பாஜவை தமிழகத்தில் நுழையவிடக் கூடாது: பொன்னேரி பொதுக்கூட்டத்தில் ராகுல் பரபரப்பு பேச்சு

சென்னை: தமிழ் கலாச்சாரத்தை பாஜ அழிக்க முயற்சிக்கிறது. டெல்லியில் இருந்து கொண்டு மோடியும், அமித்ஷாவும் தமிழ்நாட்டை ஆள துடிக்கின்றனர் என்று பொன்னேரியில் நடந்த பிரசாரத்தில் ராகுல்காந்தி பேசினார். தமிழக சட்டமன்றத் தேர்தல் இறுதி கட்டத்தை அடைந்துள்ள நிலையில் அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், வட மாநிலங்களில் நிலவும் முக்கிய அரசியல் நகர்வுகளில் ராகுல்காந்தி கவனம் செலுத்தி வருவதால் அவரது தமிழகம் வருகையில் தாமதம் ஏற்படுவதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கிடையே, தொகுதி மறுவரையறை தொடர்பாக திடீரென 3 நாட்கள் நாடாளுமன்ற கூட்டத்தை ஒன்றிய பாஜ அரசு கூட்டியது. இதனால் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்களின் தமிழகம் வருகை தள்ளிப்போனது. அதேநேரம் ராகுல்காந்தியின் பிரசாரம் தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்று திமுக கூட்டணி தலைவர்களும் விரும்பினர்.

இதை தொடர்ந்து, ராகுல்காந்தி, மல்லிகார்ஜூன கார்கேவின் தமிழகம் வருகை உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று ராகுல் காந்தி தமிழ்நாட்டுக்கு பிரசாரத்திற்கு வந்தார். நேற்று காலை 11.10 மணிக்கு டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்த ராகுல் காந்தி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரிக்கு சென்றார். அவரது வருகையை முன்னிட்டு தனியார் பள்ளி மைதானத்தில் ஹெலிகாப்டர் தரையிறங்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேலும் பெருஞ்சேரி பகுதியில் சுமார் 20,000 பேர் அமரக்கூடிய வகையில் பெரிய பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது. நேற்று மதியம் சுமார் 12 மணியளவில் பொதுக்கூட்ட மேடைக்கு ராகுல் காந்தி வந்தார். அவருக்கு தமிழக காங்கிரஸ் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து நடந்த பொதுக்கூட்டத்தில், ஸ்ரீபெரும்புதூர் காங்கிரஸ் வேட்பாளர் செல்வப்பெருந்தகை, வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானா, பொன்னேரி காங்கிரஸ் வேட்பாளர் துரை சந்திரசேகரன் ஆகியோருக்கு கை சின்னத்திலும்,

திருவள்ளூர் திமுக வேட்பாளர் வி.ஜி.ராஜேந்திரன், கும்மிடிப்பூண்டி திமுக வேட்பாளர் டி.ஜே.கோவிந்தராஜன், பூந்தமல்லி திமுக வேட்பாளர் ஆ.கிருஷ்ணசாமி, ஆவடி திமுக வேட்பாளர் சா.மு.நாசர், மாதவரம் திமுக வேட்பாளர் சுதர்சனம் ஆகியோருக்கு உதய சூரியன் சின்னத்திலும், திருத்தணி தொகுதி தேமுதிக வேட்பாளர் கிருஷ்ணமூர்த்திக்கு கொட்டும் முரசு சின்னத்திலும் வாக்கு சேகரித்தார். பிரசார பொது கூட்டத்தில், கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரும் கலந்து கொண்டார்.

அப்போது ராகுல்காந்தி பேசியதாவது: தமிழ்நாட்டிற்கு வருவதையும், இங்கு உரையாற்றுவதையும் நான் எப்போதும் மரியாதைக்குரிய விஷயமாக பார்க்கிறேன். இயற்கையாகவே காலப்போக்கில் தமிழ்நாட்டுடனான எனது உறவு வளர்ந்திருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் மீதும், தமிழ் மொழியின் மீதும் எனக்கு அன்பு அதிகரித்துக் கொண்டே போவதற்கான காரணம் குறித்து நான் சிந்தித்ததுண்டு. எனது சொந்த ஊரான ஜம்மு காஷ்மீருக்கு செல்லும் போது எப்படி உணர்கிறேனோ? அதே போன்ற உணர்வை தமிழ்நாடு எனக்கு கொடுக்கிறது.

ஆர்.எஸ்.எஸ்.சும், பாஜவும் தமிழ்நாட்டையும், தமிழ் மொழியையும், தமிழ் கலாச்சாரத்தையும் தாக்க முயற்சிக்கும் போதெல்லாம் நான் என்னை தமிழனாகவே உணர்ந்திருக்கிறேன். இயற்கையாகவே தமிழ் மக்களுடன் எனக்கு நல்ல உறவு இருக்கிறது. அதேபோல் தமிழர்களுக்கு என் மனதில் எப்போதும் தனித்த இடம் உண்டு. நான் தமிழ்நாட்டில் பிறக்கவில்லை. ஆனால் தமிழ் மண்ணுடன் நெருக்கமான உறவு உள்ளது. உதாரணத்திற்கு, நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் ஒரு மசோதாவை கொண்டு வந்து, அது பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா என்று கூறினார்கள்.

ஆனால் 2023-லேயே அந்த மசோதாவை கொண்டு வந்து விட்டார்கள். இந்த முறை பெண்களுக்கான மசோதா என்பதற்கு பின்னால், தொகுதி மறுவரையறையை மறைத்து வைத்திருந்தார்கள். நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தை குறைப்பதே அவர்கள் திட்டம். தென் மாநிலங்கள், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் சிறிய மாநிலங்களை பலவீனப்படுத்துவதே அவர்கள் எண்ணம். ஆனால், அவர்கள் முயற்சியை நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து நேற்று முறியடித்தோம். இந்தியா என்பது பல மாநிலங்களின் ஒன்றியம்.

ஒவ்வொரு மாநிலத்தின் குரலும் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்பதே அதன் நோக்கம். ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனது மொழி, கலாச்சாரத்தை பாதுகாக்கும் உரிமை உண்டு. ‘ஒரே நாடு, ஒரே தலைவர், ஒரே மொழி, ஒரே மக்கள்’ என்று பிரதமர் சொல்லும் போதெல்லாம் இந்திய அரசியலமைப்பையே அவர் தாக்குதலுக்கு உள்ளாக்குகிறார். பண்டைய காலங்களில் பல்வேறு படைகளை வைத்து தாக்கி போர்களை நடத்தினார்கள். ஆனால் பாஜ, படைகளே இல்லாமல் அதையே தான் செய்கிறது.

தமிழ் மொழி, வரலாறு, கலாச்சாரம் போன்றவற்றை பாஜ அழிக்க நினைக்கிறது. பாஜவும், ஆர்.எஸ்.எஸ்.சும் தமிழ் மக்களை புறக்கணிக்கின்றன. அவர்களால் தமிழ் மற்றும் தமிழ் மக்களை புரிந்து கொள்ள முடியாது. அவர்களால் அழிக்க முடியாத பல்லாயிரம் ஆண்டு கால வரலாற்றை தமிழர்கள் வைத்திருக்கிறார்கள். டெல்லியில் இருந்து கொண்டே தமிழ்நாட்டை ஆளுவதற்கு பாஜவுக்கு தமிழ்நாட்டில் ஒரு கூட்டாளி தேவைப்படுகிறது. அமித்ஷா மற்றும் நரேந்திர மோடியிடம் இருந்து உத்தரவுகளை பெற்று செயல்படுகிற ஒரு முதல்வர் அவர்களுக்கு வேண்டும்.

டொனால்டு டிரம்பு சொல்வதை கேட்கக் கூடியவராக இந்திய பிரதமர் இருப்பது போன்று, மோடி, அமித் ஷா கூறுவதை கேட்டு நிறைவேற்றக் கூடிய ஒரு தமிழ்நாடு முதல்வர் டெல்லிக்கு தேவை. பாஜவும், ஆர்.எஸ்.எஸ்.சும் அடிப்படையிலேயே தமிழினத்திற்கு எதிரானவர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதனால் தான் நாடாளுமன்றத்தில் உங்கள் குரலை ஒடுக்க நினைத்த அவர்கள் திட்டத்தை தவிடு பொடியாக்கினோம். இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கிற திமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள், தமிழ் மீதான தாக்குதலை தடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

பாஜ -ஆர்எஸ்எஸ்சால் தமிழ் மக்களை, தமிழ் மொழியை ஒரு போதும் தொட முடியாது. நாட்டின் முன்னேற்றத்துக்கும், வளர்ச்சிக்குமான பாதையை பாஜ தடுத்துவிட்டது. சமூக நீதி, பெண்கள் பாதுகாப்பு என்றால் என்ன என்பதை தமிழ் மக்கள் நாட்டிற்கே எடுத்துக் காட்டி வருகின்றனர். சமூக நீதியை தமிழ் மண்ணில் நிலைநிறுத்த 6 வாக்குறுதிகளை நாங்கள் பிரகடனப்படுத்துகிறோம். ஒவ்வொரு மாதமும் பெண்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.2000 நேரடியாக செலுத்தப்படும்.

வயது முதிர்ந்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக ரூ.2000 செலுத்தப்படும். கல்லூரி மாணவ, மாணவிகள் கணக்குகளில் மாதந்தோறும் ரூ.2000 வரவு வைக்கப்படும். குடும்பங்களை மேம்படுத்த ரூ.2,500 கொடுக்கப்படும். தமிழ் மக்களையும், தமிழர் வரலாற்றையும் பாதுகாக்க, பாஜவையும், ஆர்.எஸ்.எஸ்.சையும் இந்த தேர்தலில் தமிழ் மண்ணில் தோற்கடிக்க வேண்டும். தமிழர்கள் யார் என்பதை பாஜ இன்னும் புரிந்து கொள்ளவில்லை.

தமிழுக்கும், தமிழர்களுக்கும் பல ஆயிரம் ஆண்டு வரலாற்று பாரம்பரியம் உள்ளன என்பது பாஜவுக்கு தெரியவில்லை. அமித் ஷாவும், மோடியும் டெல்லியிலிருந்து தமிழ்நாட்டை ஆள வேண்டுமெனவும், தமிழ்நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டுமெனவும் விரும்புகின்றனர். ஆனால் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை தமிழ் மக்கள் தான் தீர்மானிக்க வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம். பாஜவின் முகமூடி தான் அதிமுக. டெல்லியிடம் சரணடையும் முதல்வர் வேண்டுமா? தமிழ்நாட்டில் அதிமுக என்ற கட்சியே இல்லாமல் போய்விட்டது.

இன்னும் சொல்லப் போனால் அதிமுகவை மோடியும், அமித்ஷாவும் விழுங்கி வருகிறார்கள். எனவே மக்கள் அனைவரும் இந்தியா கூட்டணியில் இருக்கிற காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பெரியாரின் சமூக நீதி உள்ளிட்ட கொள்கைகளை அவர்கள் அழிக்க பார்க்கின்றனர். ஆனால் தமிழ் மண்ணை, தமிழ் கலாச்சாரத்தை பாதுகாக்க நான் எப்போதும் துணை நிற்பேன். இவ்வாறு அவர் பேசினார்.

இதை தொடர்ந்து பிற்பகல் 1.30 மணி அளவில் சோளிங்கர் தொகுதியில் பிரசாரம் செய்ய ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு சென்றார். அதனை தொடர்ந்து மாலை 4 மணியளவில் துறையூர் தொகுதிக்கு உட்பட்ட பெரம்பலூர் பைபாஸ் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டு ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். இந்த பிரசாரத்தை முடித்துக் கொண்டு திருச்சியில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். மீண்டும் ராகுல் காந்தி வரும் 20ம்தேதி தமிழகத்திற்கு வருகை தர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

* அமித் ஷாவும், மோடியும் டெல்லியிலிருந்து தமிழ்நாட்டை ஆள வேண்டுமெனவும், தமிழ்நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டுமெனவும் விரும்புகின்றனர்.

* தமிழ் மொழி, வரலாறு, கலாச்சாரம் போன்றவற்றை பாஜ அழிக்க நினைக்கிறது.

* பாஜவும், ஆர்.எஸ்.எஸ்.சும் தமிழ் மக்களை புறக்கணிக்கின்றன. அவர்களால் தமிழ் மற்றும் தமிழ் மக்களை புரிந்து கொள்ள முடியாது.

* டெல்லியில் இருந்து கொண்டே தமிழ்நாட்டை ஆளுவதற்கு பாஜவுக்கு தமிழ்நாட்டில் ஒரு கூட்டாளி தேவைப்படுகிறது.

* பாஜவும், ஆர்.எஸ்.எஸ்.சும் அடிப்படையிலேயே தமிழினத்திற்கு எதிரானவர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

Tags : BJP ,Delhi ,Tamil Nadu ,Rahul ,Bonneri General Assembly ,Chennai ,Baja ,RAKULGANDHI ,PONNERI ,MODI ,AMITSHAH ,Tamil Nadu Assembly ,
× RELATED பெங்களூருவை வீழ்த்தியது டெல்லி: கே.எல். ராகுல் அதிரடி ஆட்டம்!